7. இசைத்தமிழில் வழங்கிவந்த வட்டப்பாலை. ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, வட்டப்பாலையென நான்கு பாலைகளிருந்ததாகவும், அவைகள் ஒவ்வொன்றிற்கும் சுருதி கணக்கு சொல்லப்பட்டிருப்பதாகவும், வட்டப் பாலையின் கணக்கால் தெரிகிறது. ஆயப்பாலையின் கணக்கை நாம் கவனிக்கையில், வட்டப் பாலையின் கணக்குக்கு ஒத்திருப்பதாகவே நினைக்க வேண்டும். ஆனால் ச-ப என்ற முறைப்படி, சகோடயாழில் சுருதிகள் சேர்த்து மாதவி வாசித்தாளென்றும், அது, பெண்டிர்க்குப் பிரியமானதென்றும் சொல்லியிருப்பதைக் காண்கிறோம். சகோடயாழின் சுருதி முறை இன்னதென்று இதன் முன் பார்த்தோம். இது நிற்க, நாலு பாலையுள் ஒன்றாகிய வட்டப்பாலை செய்யும் முறையும், அதில் சுரங்கள் நிற்கும் வரிசையும், அச்சுரங்களுக்குச் சுருதிகள் இத்தனையென்றும், அவைகளுள் பிறக்கும் சுரங்கள் இன்னின்னவென்றும் சொல்லுகிறார். திரிகோணப்பாலை, சதுரப்பாலை இன்னவையென்று விவரம் பின் பார்ப்போம். ஆகிலும் ஆயப்பாலையின் சுரக்கிரமமும், வட்டப் பாலையைப் பற்றிய விவரமும், பூர்வ காலத்தில் தென்னிந்தியாவின் சங்கீதம் இன்ன நிலையிலிருந்ததென்று அறிவதற்குப் போதுமானதென்று எண்ணுகிறேன். இவ்வட்டப்பாலை இராசி மண்டலத்தில் குறிக்கப்படுகிறது. சோதிடப் பரிச்சயம் உள்ளவர்களுக்குச் சுரம் நின்ற இராசி நீக்கி ஏழாவதேழாவதாக வரும் சப்த ஸ்தானமும் கேந்திரஸ்தானங்களும், மாதுரு, புத்திர, களத்திர, பிதுர் ஸ்தானங்களும் அவைகளின் சுரத்துக்கமையும் பிரயோக விபரமும் மிக நன்றாய் விளங்கும். இவைகளை அட்டவணையாகவும் தெளிவாகக் காட்டியிருக்கிறேன். இவைகளிற் சொல்லப்பட்ட ஒரு சக்கரம் தெரியுமானால் மற்றச் சக்கரங்கள் யாவும் தெளிவாய் விளங்கும். ஆனால், அவைகளில் சொல்லப்பட்டவை தற்காலத்தில் பழக்கத்திலில்லை யாதலால், அவைகளைத் தனித்தனியாக அங்கங்கே சொல்ல வேண்டியதாயிருக்கிறது. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர்குரவை பக்கம் 405. "குடமுத லிடமுறை யாக்குர றுத்தங் கைக்கிளை யுழையிளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே" பாலை நான்கு வகைப்படும்; ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, வட்டப்பாலையென. என்னை? "ஆயஞ் சதுரந் திரிகோணம் வட்டமெனப் பாய நான்கும் பாலை யாகும்" என்றார். அவற்றுள் வட்டப்பாலை வருமாறு : "வட்ட மென்பது வகுக்குங் காலை யோரேழ் தொடுத்த மண்டல மாகும்." "சாணளவு கொண்ட தொருவட்டந் தன்மீது பேணி யிருநாலு பெருந்திசைக்-கோணத் திருகயிறு மேலோட்டி யொன்பானு மூன்றும் வருமுறையே மண்டலத்தை வை"
|