பக்கம் எண் :

589
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

கனமாயுமிருக்கும். சத்தமும் தந்தி நீளமும் கனமாக மந்தமாய்ப் பேசும். தந்திகள் நீளமும் குறைந்து கனமும் குறைந்து போகப் போக சத்தமும் தீவிரமாகும். இதில் சொல்லப்படும் ஆயிரம் தந்திகளையும் அவற்றின் வடிவத்தையும் கவனிக்கையில் தற்காலத்தில் இத்தாலியா தேசத்தார் வழங்கும் சுரமண்டல வாத்தியத்தை ஏறக்குறைய ஒத்திருக்குமென்று தோன்றுகிறது. இதைக் கொண்டு முதல் ஊழியில் கானம் பண்ணியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பின் ஊழியில் பழக்கத்தில் இல்லை.

கல்லாடம் பக்கம், 519.

"முந்நான் கங்குலி முழுவுடற் சுற்று
மைம்பதிற் றிரட்டி யாறுடன் கழித்த
வங்குலி நெடுமையு மமைத்துட் டூர்ந்தே
யொன்பது தந்திரி யுறுத்திநிலை நீக்கி
யறுவாய்க் காயிரண் டணைத்துவரைக் கட்டித்
தோள்கால் வதிந்து தொழிற்படத் தோன்றுந்
தும்புருக் கருவியுந் துன்னிநின் றிசைப்ப."

தும்புருயாழ் - 12 விரல் சுற்றளவும் 94 விரலளவு நீளமுமுடையதாய் 9 தந்திகள் பூட்டித் தோளிலும் காலிலும் தாங்க வைத்து வாசிக்கப்படும் யாழுக்குத் தும்புருயாழ் என்று பெயர்.

கல்லாடம் பக்கம், 519.

"எழுவென வுடம்புபெற் றெண்பதங் குலியின்
றந்திரி நூறு தழங்கிய முகத்த
கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல."

கீசகயாழ் - இது 80 விரலளவு நீட்டமுடையதாய் கனமான உடலுடையதாய் 100 தந்திகள் பூட்டப் பெற்றது. இதுவும் சற்றேறக் குறைய நாரத யாழின் வடிவத்தையும் இயல்பையும் ஒத்ததாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

கல்லாடம் பக்கம், 519.

"நிறைமதி வட்டத்து முயலுரி விசித்து
நாப்ப ணொற்றை நரம்பு கடிப்பமைத்
தந்நரம் பிருபத் தாறங் குலிபெற
விடக்கரந் துவக்கி யிடக்கீ ழமைத்துப்
புறவிரன் மூன்றி னுனிவிர லகத்து
மறுபத் திரண்டிசை யனைத்துயிர் வணங்கு
மருத்துவப் பெயர்பெறும் வானக் கருவி
தூங்கலுந் துள்ளலுந் துவக்கிநின் றிசைப்ப
நான்முகன் முதலா மூவரும் போற்ற
முனிவரஞ் சலியுடன் முகம னியம்பத்
தேவர்க ளனைவருந் திசைதிசை யிறைஞ்ச."

மருத்துவயாழ் - சந்திர வட்டம் போல் வட்ட வடிவமுள்ளதாய் மேல் வாயில் முயற்றோலினால் மேளம் கட்டப்பட்டதாய் 26 விரலளவு நீளமுள்ளதாய் ஒற்றை நரம்பு பூட்டியதாய் 62 இசைகள் பிறக்கும்படி இடது விரல் நுனிகளினால் மீட்டப்படுவது மருத்துவயாழ். இது தேவயாழ் என்றுஞ் சொல்லப்படுகிறது.