மேற்கண்ட நாலு வித யாழ்களையும் கவனிக்கையில் 1,000 தந்தி பூட்டிய நாரத யாழும், 100 தந்தி பூட்டிய கீசகயாழும், வடிவத்தில் தற்காலத்தில் வழங்கும் யாழுக்கு ஒத்ததாயில்லாதிருந்தாலும் பூர்வத்தில் அப்படிப்பட்ட ஒரு வாத்தியத்திலிருந்தே தும்புருயாழ், மருத்துவயாழ், சகோட யாழ், மகதியாழ், கச்சபியாழ் முதலிய யாழ்கள் உண்டாயிருக்க வேண்டுமென்பது இயற்கை அமைப்பின் விருத்திக்குப் பொருந்தியிருக்கிறது. என்றாலும் நாம் தற்காலத்தில் வழங்கும் செங்கோட்டி யாழ் என்ற யாழும் அங்கே காணப்படுகிறது. பல தந்திகளில் சுரங்கள் மீட்டப்படுவதைப் பார்க்கிலும் ஒரே தந்தியில் மெட்டுகள் வைத்து யாழில் வாசிப்பது மிக வினிமையானதென்று அநேக காலம் பயின்ற பின் தெரியவரும். யாழின் இனிமையையும் மேன்மையையும் உள்ளபடியே அறிந்தவன் நாத பிரம்மத்தை அறியும் எல்லைக்கு வருவான். இம்மேன்மையை அறிந்த முன்னோர்கள் தங்கள் சௌகரியத்திற்கேற்ற விதமாகவும் கானத்திற்கேற்ற விதமாகவும் குறைந்த வேலைப்பாடும் அதிக சிறப்புமுடைய யாழ்களைச் செய்து வெவ்வேறு பெயருடன் வழங்கி வந்ததாகப் பின்வரும் அட்டவணையினால் தெரிய வருகிறது. ஆலவாய் க்ஷேத்திரமென்ற உத்தர மதுரையில் மகா சிறந்த வித்துவானாயிருந்த திருநெல்வேலி கங்கமுத்துப்பிள்ளை அவர்கள் நடனாதிவாத்திய ரஞ்சனம் என்னும் ஒரு புத்தகம் 1898ம் வருடத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். அதை ஆரிய திராவிட ஆந்திர பாஷைகளிலுள்ள பரத சாஸ்திரங்களை அனுசரித்து எழுதியதாகச் சொல்லுகிறார். அதில் நரம்புக் கருவிகள் 32 விதம் என்றும் அவைகளை உபயோகித்து வந்தவர்கள் இன்னின்னார் என்றும் சொல்லப்படுகிறது. அவைகளில் வழங்கி வரும் பதங்கள் பல கலப்புடையதாய்த் தோன்றினாலும் மிகப் பூர்வமாயுள்ள யாழ் வகைகளும் அங்கே சொல்லப்படுகின்றன. சங்கீதத்தைப் புதை பொருளாக வைத்திருந்தவர்கள் மற்றவர்களுக்குத் தெரியா வண்ணம் தெலுங்கில் எழுதியும் படித்தும் வந்தார்கள். தாம் படிக்கும் பல்லவியின் எழுத்துக்களைத் தெளிவாய்ச் சொல்லி விட்டால் மற்றவர்கள் கற்றுக் கொள்வார்களென்று அட்சரங்களை நசுக்குகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே. இப்படி பல வழியிலும் மறைக்கப்பட்ட சங்கீதம் பலமுகமாய் நாளொரு வண்ணமாய் சமஸ்கிருத பாஷையிலும் பிற பாஷைகளிலும் எழுதப்பட்டு வருகிறதென்று தெளிவாய்த் தெரிகிறது. பூர்வம் தமிழ் மக்கள் வழங்கிவந்த இராகங்கள் தாளங்கள் அபிநயங்கள் முதலியவைகளின் பெயர்களும் வாத்தியக் கருவிகளின் பெயர்களும் அந்நிய பாஷைகளில் மாற்றப்பட்டு அவைகளே தற்காலத்தில் வழங்கி வருகின்றன என்பதை நாமறிய வேண்டும். மேலும் தற்காலத்தில் தமிழையே தாய்மொழியாகக் கொண்ட பலர் தீஞ்சொற்சுவை பொருந்திய தமிழில் எழுதுவதைப் பார்க்கிலும் அரைகுறையாகத் தாம் கற்றுக்கொண்ட அந்நிய பாஷைகளின் வார்த்தைகளைக் கலந்து எழுதுவது நன்கு மதிக்கத் தகுந்தது என்று எண்ணித் தமிழைச் சீர்குலைத்தார்கள். தனித்து எவ்விதக் கலப்புமுறாத தமிழ் மொழியை பல கலப்புள்ள அந்நிய பாஷைகளின் வார்த்தைகளோடு கலந்து கெடுத்தார்கள். வேண்டுமென்று இன்னும் கெடுத்துக் கொண்டுமிருக்கிறார்கள். பூர்வம் தென் மதுரையில் அரிய பல கலைகள் வழங்கி வந்தனவென்றும் அவற்றில் இசைத் தமிழ் ஒன்றென்றும் அறிவோம். பூர்வமுள்ள கலைகள் யாவும் தங்கள் பாஷையிலேயே ஆதியில் உண்டாயிற்றென்று சொல்லவும் பூர்வ நூல்களில் பலவாறு சந்தேகிக்கும் படியான சொற்களைச் சேர்க்கவும் துணிந்தார்கள். இப்படி இரண்டுங் கெட்டானாய் இனம் இன்னதென்று தெரியாமல் மயங்கும்படி ஆகிவிட்டபடியால் உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்வது கடினமாயிருக்கிறது. தமிழ் மொழியில் இரவல் வாங்கிய சொற்களை காலையும் தலையையும் போக்கி வால் முளைக்கச் செய்து வழங்கும் அந்நிய பாஷை நான் தான் முதல்வனென்று கூச்சலிடுகிறது. இப்படிச் சீரழிந்த
|