| குறும்போக்கு. | | 8. | “துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளுந் தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்.” |
இவையெல்லாம் ஈண்டு விரித்துரைப்பிற் பெருகும். இதில் தாரமும் உழையும் தம்மிற் கேட்டும், குரலும் இளியும் தம்மிற் கேட்டும் துத்தமும் விளரியும் துன்னறக்கேட்டும், விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டும் என்பது ஷட்ஜம பஞ்சம முறையாய்ச் சுரங்கள் தெரிந்து குரல் முதலாக இணை சுரங்கள் பார்த்து வாசித்தல் என்பதாம். சிலப்பதிகார அரும்பதவுரை 25. 1. வார்தலென்பது - சுட்டுவிரற் செய்தொழில். 2. வடித்தலென்பது - சுட்டுவிரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல். 3.உந்தலென்பது - நரம்புகளை உந்தி வலிவிற் பட்டதும் மெலிவிற் பட்டதும் நிரல் பட்டதும் நிரலிழி பட்டது மென்றறிதல். 4.உறழ்தலென்பது - ஒன்றிடையிட்டு இரண்டிடையிட்டும் ஆராய்தல். 5.உருட்டலென்பது - இடக்கைச் சுட்டுவிரல் . . தானே யுருட்டலும் வலக்கைக் சுட்டுவிரல் தானே யுருட்டலும் சுட்டோடு பெருவிரற் கூட்டியுருட்டலும் இருபெருவிரலும் இயைற்துட னுருட்டலு மெனவரும். 6.“தெருட்ட லென்பது செப்புங் காலை யுருட்டி வருவ தொன்றே மற்ற வொன்றன் பாட்டுமடை யொன்ற நோக்கின் வல்லோ ராய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும் பாட்டொழிந் துலகினி னொழிந்த செய்கையும் வேட்டது கொண்டு விதியுற நாடி” எனவரும். இவை இசைத்தமிழ்ப் பதினாறு படலத்துட் கரணவோத்துட் காண்க. 29 - 30 பிங்கலநிகண்டு பக்கம், 176, 177. யாழ்நரம்போசையின் பெயர் சூத்திரம் 1441. “கலித்தல் சும்மை கம்பலை யழுங்கல் சிலைத்த றுவைத்தல் சிலம்ப லிரங்க லிமிழ்தல் விம்ம லிரட்ட லேங்கல் கனைத்த றழங்கல் கறங்க லரற்ற லிசைத்த லென்றிவை யாழ்நரம் போசை.” (இ-ள்.) யாழ்நரம்போசையின் பெயர் - கலித்தல், சும்மை, கம்பலை, அழுங்கல், சிலைத்தல், துவைத்தல், சிலம்பல், இரங்கல், இமிழ்தல், விம்மல், இரட்டல், ஏங்கல், கனைத்தல், தழங்கல், கறங்கல், அரற்றல், இசைத்தல். இவைகளைக் கவனிக்கையில், யாழில் வழங்கும் பலவித கமகங்களையும், மற்றும் சில நுட்பங்களையும், சொல்லுகிறதாகத்தெரிகிறது. இதோடு, யாழ் செய்யும் மரத்தின் குணதோஷங்களும், இன்னிசையைக் கெடுக்கும் நால்வகைக்குற்றங்களும், இன்னின்னவென்று சொல்லுகிறார்.
|