பக்கம் எண் :

600
யாழ் வாசிக்கும் பொழுது தமிழ்மக்கள் கவனித்துவந்த சில முக்கிய குறிப்புகள்.

மேலும், இளங்கோவடிகளுடையகாலத்தில் வழங்கிவந்த யாழ்முறைகளையும், அதற்குப்பின்னுள்ளவர்கள் காலத்து வழங்கிவந்த முறைகளையும் நோக்கும்போது, அவை வர வர மிகவும் குறைந்து வந்தனவென்று தோன்றுகிறது.

அவர் காலத்தில் யாழ்வாசிக்கும் இலக்ஷணங்கள் அநேகமிருந்ததாகவும், பிறகு உரையாசிரியர்காலத்து அவை வரவரக் குறைந்ததாகவும், தெரிகிறது. தசவித கமகங்களைப்பற்றி நாம் பார்ப்போமானால், பிங்கல முனிவர்காலத்தில் பலவிதமான கமகங்களிருந்ததாகத் தெரிகிறது. இப்போது வழங்கிவரும் வடமொழி சங்கீதச் சொற்கள் முற்காலத்தில் காணப்படவேயில்லை, முன்னேயேயிருக்குமானால், அங்கங்கே வடசொற்களைக்காண்போம். ஆனால் பிற்காலத்தவர் சமஸ்கிருத சொற்களை அங்கங்கே கலந்து பலவகையிலும் உபயோகித்தார்கள். பின் 400, 500 வருஷத்திற்குட்பட்ட தென்னிந்திய மக்கள் சமஸ்கிருத மக்களாய்த் தென்னிந்திய சங்கீதத்திற்கு முற்றிலும் வடமொழியையே உபயோகித்து வருகிறார்களென்பது தெளிவாகத் தெரிகிறது.

சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 33.

"இனி ‘வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி’ என்பது முதலாக ‘புறத்தொரு பாணியிற் பூங் கொடி மயங்கி’ என்பதீறாக முன்னர்ப்பாடிய ஒன்பான் கோவையின் மேற்செம்பாலைப் பண்ணொழிந்து பதினாற் கோவையாகிய சகோடயாழை வாங்கி வலக்கையைப் பதாகையாக்கி அக்கையால் கோடு அசையாதபடி பிடித்து இடக்கை நாலு விரலும் மாடகத்தையுறப் பிடித்துச்செம்பகையும் ஆர்ப்பும் அதிர்வும் கூடமுமாகிய பகை நீங்க முறையிற் பிழையாத நரம்பினாற் பதினாலு நரம்பினையும் உழைமுதல் கைக்கிளை யிறுவாயாக "மெலிவிற் கெல்லை மந்தக்குரலே" என்பதனான் உழைகுரலான மந்தமும், "வலிவிற்கெல்லை வன்கைக் கிளையே" என்பதனாற் கைக்கிளையிறுவாயான வலிவும் இணை, கிளை, பகை, நட்பின் வழிகளிலே பொருந்தப்பார்த்துக் குரல் நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளி நரம்பையும் முற்பட ஆராய்ந்து இசையோர்த்து அதன் முறையேயல்லாத நரம்புகளையும் ஆராய்ந்து இசையோர்த்துத் தீதின்மையறிந்து உழைமுதலாகவும் உழையீறாகவுமென மந்த முதலாகவும் மந்த மீறாகவும் குரல் நரம்பு மந்தமானபோது குரல் நரம்பே முதலு முடிவுமாகவும் அகநிலைமருதமும் புறநிலைமருதமும் அருகியன்மருதமும் பெருகியன்மருதமுமென நால்வகைச் சாதிப்பெரும்பண்கள் விளைநிலம்பெற வலிவு மெலிவு சமமென்னும் மூவகை இயக்கும் முறைமையிலே ஆராய்ந்து பாடிப் பின்னர் மாத்திரைகுறைந்ததிற் பண்ணைப்பாடுமேல்வைக்ண் அப்பண்ணை இனிதாகப்பாடி நெகிழ்வுற்ற மனத்தினளாய் அயர்ந்தாளெனவுமாம்."

மேல் வரிகளைக் கவனிக்கையில் யாழ வாசிக்கும்பொழுது யாழைப் பிடிக்கும் முறையையும் கீதத்தைக் கெடுக்கும் பகை ஓசைகள் வராமல் கவனிக்கவேண்டிய குறிப்புக்களையும் ச-ப முறையாய் சுரங்கள் யாவும் அமைந்திருக்கிறதா என்று பார்க்கும் வகையையும் தான் எடுத்துக்கொண்ட சுரத்திற்கு நால்வித ஜாதிகள் கண்டு பிடித்து அவற்றிற்கு வலிவு, மெலிவு, சமம் என்னும் மூவகை இயக்கும் அதாவது தாரஸ்தாயி, மந்தரஸ்தாயி, மத்தியஸ்தாயியாக வரும் சுரங்கள் இன்னின்னவை யென்றும் ஆராய்ந்து பாடினார்களென்று தெரிகிறது. இங்கே இசை யோர்த்து என்பது சுருதி சேர்த்து என்றும் மூவகை இயக்கமென்பது மூன்று ஸ்தாயி என்றும் தோன்றுகிறது.

பூர்வகாலத்தில் யாழ் வாசித்தலும் குழல் வாசித்தலும் மிக மேன்மை பொருந்தியதாகவும் வாய்ப் பாட்டிற்கு இவை மிகப் பொருத்த முடைய கருவிகளாயிருந்த தாகவும் சொல்லப்படுகிறது. இதில் குழல் இன்னின்னவற்றால் செய்யலாமென்றும் இவ்வளவு வருட முதிர்ந்த மரங்களில் செய்யப்படவேண்டுமென்றும் இன்ன குற்ற மிருக்கக்கூடாதென்றும் குழலின் அளவு, துவாரத்தின் அளவு இன்னபடி யிருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார்.