சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை, பக்கம் 82-83. "குழலுமென்பது வங்கியப் பாடலு மென்றவாறு. குழல் வங்கியம்; அதற்கு மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி கருங்காலியென ஐந்துமாம். என்னை? "ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே பாங்குறுசெங் காலி கருங்காலி-பூங்குழலாய் கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார் பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து" என்றாராகலின். இவற்றுள் மூங்கிலிற் செய்வது உத்தமம். வெண்கலம் மத்திமம். ஏனைய அதமமாம். மூங்கில் பொழுது செய்யும். வெண்கலம் வலிது. மரம் எப்பொழுதும் ஒத்து நிற்கும். இக்காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும்; கருங்காலி வேண்டுமென்பது பெரு வழக்கு. கழை-குழல். இவை கொள்ளுங்கால் உயர்ந்து ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்று மயங்கின் நாதமில்லையா மாதலான் மயங்கா நிலத்தின் கண் இளமையும் நெடும் பிராயமுமின்றி ஒரு புருடாயுப்புக்க பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாகச் செய்து அதனை நிழலிலேயாற இட்டு வைத்துத் திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதல் செய்கையறிந்து ஓர்யாண்டு சென்ற பின் இலக்கண வகையான் வங்கியஞ் செய்யப்படும்; என்னை? "உயர்ந்த சமதலத் தோங்கிக்கா னான்கின் மயங்காமை நின்ற மரத்தின்-மயங்காமே முற்றி யமர்மரந் தன்னை முதறடிந்து குற்றமிலோ ராண்டிற் கொளல்" என்றாராகலின். இதன் பிண்டியிலக்கணம்: நீளம் இருபது விரல்; சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஓர் பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தாலே அணைசு பண்ணி இட முகத்தையடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். என்னை? "சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு நல்லவிர னாலரையா நன்னுதலாய்-மெல்லத் துளையளவு நெல்லரிசி தூம்பிட மாய வளைவலமேல் வங்கிய மென்" என்றாராகலின். இனித்துளையளவிலக்கணம்: அளவு இருபது விரல். இதிலே தூபமுகத்தின் இரண்டு நீக்கி முதல் வாய்விட்டு இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினு மிரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரையென்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழு விரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும். "இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி மருவு துளையெட்டு மன்னும்-பெருவிரல்க ணாலஞ்சு கொள்க பரப்பென்ப நன்னுதலாய் கோலஞ்செய் வங்கியத்தின் கூறு" என்றாராகலின் இவ்வங்கியம் ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி முன்னின்ற ஏழினையும் ஏழு விரல் பற்றி வாசிக்க. ஏழு விரலாவன: இடக்கையிற் பெருவிரலும் சிறு விரலு நீக்கி மற்றை மூன்று விரலும் வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரலுமென்க. என்னை? "வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித் துளையேழி னின்ற விரல்கள்-விளையாட் டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா வடமாரு மென்முலையாய் வைத்து
|