என்றாராகலின். இவ்வங்கியத்து ஏழு துளைகளில் இசை பிறக்குமாறு: அஃது எழுத்தாற் பிறக்கும். எழுத்து ச, ரி, க, ம, ப, த, நி என்பன. இவ்வேழெழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில் செய்ய இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும். ஏழிசையாவன: சட்சம் இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதமென்பன. இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும். என்னை? "சரிகம பதநியென் றேழெழுத்தாற் றானம் வரிபரந்த கண்ணினாய் வைத்துத்-தெரிவரிய வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்குஞ் சூழ்முதலாஞ் சுத்தத் துளை" என்றாராகலின்." மேற்கண்ட உரையில் சட்சம், இடபம், காந்தாரம், முதலிய ஏழு இசையின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் செய்யுளில் அவைகள் காணப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். உரை எழுதிய அடியார்க்கு நல்லார் காலத்திலும் அவருக்கு 400, 500 வருஷங்களுக்கு முன்னும் சமஸ்கிருதத்தில் சங்கீத நூல்கள் எழுதப்பட்டுச் சமஸ்கிருத வார்த்தைகள் கலப்புற்று இசைத் தமிழில் வழங்கி வந்தனவென்று பல தடவைகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் இளங்கோவடிகள் காலத்தில் அப்படிக் காணமாட்டோம். 3. தென்னிந்தியாவில் வழங்கிவந்த அபிநயத்தின் சுருக்கம். அபிநயம், ஆசான் பாடுவதற்கேற்பத் தாள அங்கத்தின்படி கால்களால் தாளத்தின் அடைவு பிடித்து நர்த்தனம் பண்ணுவதும், பாடுவதற்கேற்பத் தான் வாயினால் பாடுவதும், பாடும் பண்ணின் பொருளுக்கேற்பச் சிரம் சுரம் கண் முதலியவைகளினால் அபிநயிப்பதுமாகிய மூன்று அங்கங்களுடையது. இதில் சிரவகை பத்தொன்பதும், நேத்திரவகை முப்பத்தாறும், இணைக்கை பதினைந்தும், இணையாவிணைக்கை முப்பத்து மூன்றுடன் அங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் முதலிய அங்க பேதத்தினால் நவரசங்களையும் விஸ்தரித்து உலகத்திலுள்ளவர் செயல் அத்தனையும் சொல் அத்தனையும் பொருள் அத்தனையும் காலங்களத்தனையும் விளங்கும்படிக் காட்டுவதாம். இப்படிப் பூர்வத்திலே இனிய ஓசையினாலும் அழகிய ஆடலாலும், உள்ளம் உணர்த்தும் அபிநயத்தாலும் தெய்வ சந்நிதியில் ஆடிப்பாடி அக மகிழ்ந்தார்கள். இப்படி பாவம் ராகம் தாளம் என்ற மூன்றையுங் கொண்டு தெய்வத்தை ஆராதித்தவர்கள் பூமி முழுதும் ஒரு குடையின் கீழ் ஆண்ட சக்கிரவர்த்திகளும் முடி மன்னர்களும் ரிஷிகளுமாயிருந்தார்களென்பதை நாம் மறந்து போகாதிருக்க வேண்டும். சங்கீதத்தின் மேன்மை அழிந்து இழிகுலத்தோர் உபயோகத்துக்கு வந்ததைக் கண்ட மேன்மக்கள் நெட்டித் தலைப்பாகையைப் போல் சங்கீதத்தையும் வெறுத்து விட்டார்களென்று நாம் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் அபிநயத்தைப் பற்றி அதிகம் சொல்லியிருந்தாலும் அவைகளில் முக்கியமானவற்றை மாத்திரம் ஞாபத்துக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். மற்றும் விரிவான பாகங்களை அங்கே கண்டு கொள்க. இதில் கூத்தின் விகற்பங்களும் அவற்றின் இலக்கணங்களும், பதினான்கு வகையான விலக்குறுப்பின் இலக்கணங்களும், ஒன்பது சுவையின் விபரமும், நடனத்தில் பொதுவாக வரும் 24 வகை அபிநயக் குறிப்பும் சுருக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
|