பக்கம் எண் :

603
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை, பக்கம் 63.

ஆடலாசிரியன் அமைதி.

12-25

"இருவகைக் கூத்தி னிலக்கண மறிந்து
பல்வகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க வறிந்தாங்
காடலும் பாடலும் பாணியுந் தூக்குங்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையுங்
கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை யாடலிற் களைதலு
குரவையும் வரியும் விரவல செலுத்தி
யாடற் கமைந்த வாசான் றன்னொடும்."

இ-ள் இருவகைத்தாகிய அகக்கூத்தின் இலக்கணங்களையறிந்து பல வகைப்பட்ட புறநடங்களையும் விலக்குறுப்புக்களைச் சேரப்புணர்க்கவும் வல்லனாகி அல்லிய முதற் கொடுகொட்டியீறாகக் கிடந்த பதினொரு கூத்துக்களும் அக்கூத்துக்களுக்குரிய பாட்டுக்களும் அவற்றுக்கடைத்த வாச்சியங்களின் கூறுகளும் நூல்களின் விதித்த வழியே தெரிந்து கூத்தும் பாட்டும் தாளங்களும் தாளங்களின் வழி வந்த தூக்குக்களும் தம்மிற்கூடின நெறியையுடைய அகக்கூத்தும் புறக்கூத்து முதலாயின நிகழ்த்துமிடத்துப் பிண்டி பிணையல் எழிற்கை தொழிற்கையென்று சொல்லப்பட்ட நான்கினையும் நூலினகத்துக் கொண்ட கூறுபாட்டையறிந்து அகக்கூத்து நிகழுமிடத்துக் கூடைக்கதியாகச் செய்தகை வாரக்கதியுட் புகாமலும் வாரக்கதியாகச் செய்தகை கூடைக்கதியுட் புகாமலும் புறக்கூத்து நிகழுமிடத்து, ஆடனிகழுமிடத்து அவிநய நிகழாமலும் அவிநய நிகழுமிடத்து ஆடனிகழாமலும் குரவைக்கூத்தும் வரிக்கூத்தும் தம்மில் விரவாதபடியுஞ் செலுத்தி அமைந்த ஆடலாசிரியனுமென்க.

இது பொழிப்புரை.

12. இருவகைக் கூத்தாவன :- வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல், பொதுவியல்; வரிக்கூத்து வரிச்சாந்திக்கூத்து; சாந்திக்கூத்து, விநோதக்கூத்து; ஆரியம், தமிழ்; இயல்புக்கூத்து, தேசிக்கூத்தெனப் பல வகைய. இவை விரிந்த நூல்களிற் காண்க.

12. ஈண்டு இருவகைக் கூத்தாவன :- சாந்தியும், விநோதமும் என்னை?

"அவைதாம், சாந்திக் கூத்தும் விநோதக் கூத்துமென்
றாய்ந்துற வகுத்தன னகத்தியன் றானே"
என்றாராகலின்.

"சாந்திக் கூத்தே தலைவ னவிநய
மேந்திநின் றாடிய வீரிரு நடமவை
சொக்க மெய்யே யவிநய நாடக
மென்றிப் பாற்படூஉ மென்மனார் புலவர்"

என்பதனால் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்துச் சாந்திக் கூத்தெனப்படும். இவற்றுள் :-