| 20 | மக்களெலாங் கீதமுறைப் படிபயிலச் சுருதிநிலை வகுத்துக் கூறத் தொக்கவணுப் பிரமாணச் சுருதிகளை யுந்தெளிவாச் சொலந் நாட்டுப் புக்ககீ தத்தினிலே கீதங்கீர்த் தனம்ராகம் பொருந்தப் பண்ணுந் தக்கமுறை யில்லையெனுங் குறையறவே ழிரண்டாண்டு தகமுயன்றான். |
| 21 | ஒரறிவே முதலாக வாறறிவு வரைகொள்ளு முயிர்க ளெல்லாந் தாரணியின் மகிழ்ந்துபர வசமேவக் கடவுளருஞ் சந்தோ ஷிக்கச் சீரதிகம் பெறுகீத முத்தியையுங் கொடுக்குமெனுஞ் சிறப்பைத் தேர்ந்தே யாருமினி திதையுணர வெளியிடுவா னொருபெருநூ லாக்க நேர்ந்தான். |
| 22 | அந்நூற்குப் பெயர்கருணா மிருதசா கரமெனவே யமைத்தா னந்த நன்னூலிற் றமிழ்த்தொன்மை தமிழுயர்வு தமிழொன்றே நற்றாய்ப் பாஷையென்னுமுறை மறுக்கமுடி யாதநியா யங்களுட னெடுத்துக் காட்டிப் பன்னுபெரும் புல்வருளங் குதுகுலிப்ப விளக்கியிருப் பதுடன் பின்னர். |
| 23 | தென்னிந்திய சங்கீதத் தொடக்கமத னுயர்வுபண்டே செகத்தை யாண்ட மன்னவரா தரித்தமுறை கோயில்களிற் கட்டளைகள் வகுத்த மாட்சி துன்னுசிலா சாசனங்க ளிவையிவையென் றெடுத்தெடுத்துச் சொற்க டோறுங்கன்னலமு தந்துளிப்பந் கரதலா மலகமெனக் கவினக் காட்டி. |
| 24 | பரதருடன் சாரங்க தேவர்முன்னோர் நூல்களிரு பானி ரண்டே சுருதியெனல் தவறென்னச் சங்கநூ லெனச்சிறந்து தொன்மை மேவும் பரிபாடல் சிலப்பதிகா ரம்பிங்க லந்தைமுதற் பலவற் றாலுங் கருதுயுக்தி யாலுமநு பவத்தாலும் விளக்கமுறக் காட்டி வைத்தே. |
| 25 | அனையபல பிரபலநி யாயங்க ளாற்சுருதி யறுநான் கென்றே நினைவுகொளக் கணக்குகளா தாரங்க ளொடுகாட்டி நிலைக்கச் செய்தும்இனையவகை யிசைநலங்கள் பற்பலவும் விளக்கியுநல் லிசைவல் லோர்கள்புனையுமபி தானமெலாங் காட்டியுமின் னும்பலசீர் பொருந்தச்சேர்த்தே. |
| 26 | சொற்செறிவாற் பொருட்பொலிவாற் பற்பலவி சேடமலி தொகையா லிங்ஙன்நற்பெருநூ லிஃதொன்றே யெனவுலகத் தெல்லவரு நயந்து கூறப் பொற்புமிக நிறைகருணா மிருதசா கரநூலைப் புனைந்து தந்தான் அற்புதமாங் கீதவல்லோன் ஆபிரகாம் பண்டிதன்போ லார்வல் லாரே. |
| 27 | மங்காத புகழ்மேவும் பரோடாமன் னிவ்வாண்டு மார்ச்சு மாதம் இங்காரும் பிரமிக்கத் தன்முன்னர்க் கூட்டுவித்த எல்லா இந்த்ய சங்கீத சபையினிலே திவானாகும் மாதவராவ் தக்கோ னாதி பொங்கார்வங் கல்வியிசைப் புலமைபடைத் தவர்பலரும் பொருந்தும்போது. |
| 28 | இந்தவுய ராபிரகாம் பண்டிதமாறன் றவத்தா லீன்றெ டுக்க வந்தமர கதவல்லி கனகவல்லி யெனும்பெயர்ப்பெய் மணிக ளோடு முந்தவுற்ற பெண்மணிகள் வாயாலும் வீணைகொண்டு முறைவ ழாது சந்தவிதிப் படியிசைத்தேம் பொழியச்செய் தவைமகிழ்ந்து சாற்றப்பெற்றே. |