பக்கம் எண் :

630
பரதர் நூலிலுள்ள சில இராகங்களும் அவைகளின் விபரமும்.

அவைகளில் அநேகம் அழிந்து போயினவென்றும் அவைகளிற் சொல்லப்பட்ட சுருதி முறைகளை இன்னவென்று திட்டமாய் அறிந்து கொள்ளாமல் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன வென்றும் இதன் பின் பார்ப்போம்.

தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க பாண்டித்தியமுடைய மறைத்திருவன் சுவாமி விருதை சிவஞான யோகிகளியற்றிய வேதாகம உண்மை யென்ற சிறு புஸ்தகம் 22-23 பக்கங்களில் இதைப் பற்றி அடியில் வரும் சில வசனங்கள் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.

"அவ்விசைகளில் முதலிசை (சுத்தசுரம்) வீற்றிசை (விகிர்தி சுரம்) என்பவற்றின் மாறலால் தோன்றிய ஏழுபாலை (மேளக்கர்த்தா-ராகாங்க ராகம்) களும் ஏழு பாலையினின்று தோன்றிய பண்கள் (ராகம்) 103உம் உள. அவை பண் 17, பண்ணியல் 70, பண்டிறம் 12, பண்டிறத்திறம் 4, என இசையின் எண் வகையால் நால் வகைப்படும். இவற்றை வடமொழியார் முறையே சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சதுர்த்தம் (சுராந்தரம்) என்ற பெயரால் வழங்குகின்றனர். இவ்வெழுபாலைகளும் இசைப்புலவன் அறிவின் பெருமைக்குத் தக்கபடி பல்லாயிரம் பண்களாகிய அலைகளைத் தோற்றுவிக்கத்தக்க கடல்கள் போன்றன.

இப்பொழுது வடமொழியில் சங்கீதத்துக்கு முதல் நூலாய் விளங்கும் சங்கீத ரத்நாகரத்தில் பண் தக்க ராகத்தில்-1. இந்தளத்தில்-1. நட்டராகத்தில்-1. சாதாரியில்-2. பஞ்சமத்தில்-7. கௌசிகத்தில்-9. வகைகளும் வேறு வகைகள் 10உம் ஆக 31 ராகங்கராகங்களாக வகுத்து அவற்றை ராகாங்க பாஷாங்க கிரியாங்க உபாங்க ராகங்களாகப் பகுத்து அவற்றில் நூற்றுக்கணக்கான ஜன்யராகங்களும் (கிளைப்பண்) விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. அஜ்ஜன்ய ராகங்களுள் மற்ற பண்களும் கூறப்பட்டுள்ளன. அன்றியும் தக்க ராகம் கௌசிகம் என்ற ராகாங்க ராகங்களில் ஜன்னிய ராகங்களுக்குத் தக்கவிபாஷா தேவாரவர்த்தநீ, மாளவ கைசிக தேவார வர்த்தநீ என்று பெயரிட்டு அவை தேவாரத்தில் வழங்கும் பண்கள் என்பது குறிக்கப்பட்டுமிருக்கின்றது. அதற்கு வழி நூல் செய்வதாய்க் கூறிப்புகுந்த ராமாமாத்தியர் சுரமேளகளாநிதியில் 20 மேளங்களும் 45 ஜன்ய ராகங்களும் கூறினார்.

பின்னர்த் தமிழ் எழுபாலைகளில் செம்பாலை முதல் 6 பாலைகளையும் உழையை (சுத்த மத்திமத்தை) வைத்து 6 வட்டங்கள் (சக்கரங்கள்) ஆகவும் மேற்செம்பாலையிலுள்ள வேற்றுழையை (பிரதிமத்திமத்தை) வைத்து 6 வட்டங்களாகவும் அமைத்து அவற்றால் பூர்வமேளம் 36 உத்தரமேளம் 36 ஆக 72 மேளங்களைக் கற்பித்து அதில் நூற்றுக்கணக்கான ஜன்யராகங்களும் வடமொழியில் விரிக்கப்பட்டுள்ளன. கி. பி. 1620ல் இருந்த வேங்கடமகி கூறிய மேளங்களும் இத்தகையனவே."

5. பரதர் நூலிலுள்ள சில இராகங்களும் அவைகளின் விபரமும்.

சங்கீத ரத்னாகரர் தாம் பரதருடைய அபிப்பிராயத்தை அனுசரித்துச் சொல்லுகிறதாகச் சொல்லுகிறார். பரதர் எழுதிய பரத சாஸ்திரத்தில் எப்படிச் சொல்லியிருக்குமோவென்று அறிய விரும்புவோம்.

மண்டல கண்டிதர் என்ற பண்டிதர் எழுதிய மாதிர்கா விலாசத்தில் 141, 142, 143ஆவது பக்கங்களில் பரதருடைய சங்கீத சாஸ்திரத்தின் கருத்தைச் சுருக்கிச் சொல்லுகிறேன் என்று சொல்லும் பாகத்தை இங்குப் பார்ப்பது ஒருவாறு திருப்தியைத் தருமென்று நினைக்கிறேன்.

"அதாவது சாமவேதத்திலிருந்து சுரங்கள் உற்பத்தியாயின. சுரங்களிலிருந்து கிராமம் உற்பத்தியாயிற்று. கிராமங்களிலிருந்து ஜாதிகள் உற்பத்தியாயின. ஜாதிகளிலிருந்து இராகம் உற்பத்தியாயிற்று. இராகங்கள் அந்தந்த தேசங்களுக்குத் தகுந்தபடி வெவ்வேறு பெயர்களால் வழங்கி வருகின்றன.