வேதம் பாடும் இன்னிசையிலிருந்தே சுரங்கள் உற்பத்தியாயிற்றென்று சொல்வதைக் கவனிக்கையில் வேத பூர்வமாக சுரங்கள் உண்டாயிற்றென்று சொல்வதற்கேயொழிய வேறல்ல. சாம வேதத்திற்கு முன்பே தமிழ் மக்கள் வழங்கி வந்த இசைத் தமிழில் சங்கீத சாஸ்திரம் மிக விரிவாக இருந்ததென்று நாம் அறிய வேண்டும். 2. சுரத்திலிருந்து கிராமம் உற்பத்தியாயிற்று என்கிறார். அதைக் கவனிக்கையில் ஷட்ஜ மத்திம கிராமங்களை ஒப்புக் கொண்டு காந்தாரக் கிராமம் பூதலத்தில் இல்லை என்கிறார். ஆனால் வட்டப்பாலையில் ஷட்ஜக் கிராமம், மத்திம கிராமம், பஞ்சம கிராமம், தாரக்கிராமம் என்ற 4 வகைகள் சொல்லப்படுகின்றன. இதில் தாரக்கிராமமே காந்தாரக்கிராமம் ஆகும். அம் முறையில் 4 விதமான யாழ்கள் சொல்லப்படுகின்றன. 555ம் பக்கத்தில் சொல்லியிருக்கும் நால்வகை யாழின் சுரக்கிரமத்தையே இங்கே கிராமமென்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது. சுருதிகளின் அலகு முறையை 4, 3, 2, 4, 4, 3, 2 என்று இவர் சொல்லியிருப்பதினால் அது பஞ்சமத்திலிருந்து பாடும் நெய்தல் யாழ் அலகு முறைக்கு ஒத்திருக்கிறது. பஞ்சமத்திலிருந்து ஷட்ஜமம் ஆரம்பிக்கும்பொழுது நாம் அதை ஷட்ஜக் கிராமம் என்று சொல்லலாமா என்று நினைப்போம். "குரல் குரலாக எடுத்து இளிகுரலாக வாசித்தாள்." என்ற வசனத்தைக் கவனித்தால் குரலிலிருந்து ச ரி க ம நாலும் மந்தர ஸ்தாயியாகவும் இளியிலிருந்து உழை வரையும் ப த நி ச ரி க ம அதாவது ச ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களையும் மத்தியஸ்தாயியாகவுங் கொண்டு கானம் செய்தார்களென்று தெளிவாகத் தெரிகிறது. இதையே பஞ்சம சுருதியென்று தற்காலம் நாம் வழங்கி வருகிறோம். பாட விரும்பும் ஒருவன், தன் சாரீரத்தில் குறைந்த ஓசையாய்ச் சொல்லக்கூடும் நாதத்தை ச வினின்று ஆரம்பித்து, இரண்டு ஸ்தாயி சொல்லிப் பார்த்துக் கொண்டு, அதன் பின் முதல் ஸ்தாயியின் பஞ்சமத்திலிருந்து ஷட்ஜம் ஆரம்பித்துக் கொள்வது நம் அனுபோகத்திலிருக்கிறது. இதையே ஷட்ஜ கிராமம் என்று சொன்னார். இது போலவே குறிஞ்சி யாழில் மத்திம கிராமமும் சொல்லப்பட வேண்டும். வட்டப்பாலையினால் அவை தெளிவாகத் தெரிகிறது. இவைகளில் சில சந்தேகங்கள் வந்தனிமித்தம் உலகத்தில் பாடப்படவில்லையென்றும் சொர்க்க லோகத்தில் பாடப்படுகிறதென்றும் சொன்னார் போலும். பூர்வம் இசைத் தமிழ் நூல்களில் சொல்லப்படும் இவ்வலகு முறைகளும் அவைகளின் கிரமமும் இன்னதென்று நிச்சயப்படுத்திக் கொள்ளக்கூடாமையினால் இப்படிச் சொல்ல நேரிட்டதென்று நினைக்கிறேன். ஒருவன் உடம்பில் வைக்கப்பெற்ற முத்திரைகளைப் பல தடவைகளிலும் பணம் பெற்றுக் கொண்டு இறக்கி அவனைத் தேவலோகத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று தேவலோகத்திலுள்ளவர்களுக்குச் சீட்டுக் கொடுக்கிற வழக்கம் இன்று வரையும் வழங்கி வருகிறதே. அதைப் போலவே இதுவும் ஒரு சூசனையா யிருக்கலாமென்று எண்ணுகிறேன். கிராம சுரம் பிடித்துப் பூர்வ தமிழ்மக்கள் கானம் பண்ணி வந்த மேன்மையான முறை பிற்காலத்தில் வழங்காததினிமித்தம் இப்படிச் சந்தேகிக்க வேண்டியதாயிற்று. 3. கிராமங்களிலிருந்து ஜாதி உற்பத்தியாகிறதென்று சொல்லுகிறார். "நாற்பெரும் பண்ணும் சாதி நான்கும்" என்பதைப் பற்றி இதன் முன் 573ம் பக்கத்தில் சொல்லியிருக்கிறோம். அதையே இங்கு சுரத்திலிருந்து கிராமமும், கிராமத்திலிருந்து சாதியும் உற்பத்தியாகிறதென்று சொல்லுகிறதாகத் தெளிவாய்த் தெரிகிறது. 4. ஜாதிகளிலிருந்து இராகம் உற்பத்தியாயிற்றென்று சொல்லுகிறார். இதைக் கவனிக்கையில்,
|