"நாற்பெரும் பண்ணும் சாதி நான்கும் பாற்படு திறனும் பண்ணெனப் படுமே" என்ற விதிப்படி நால்வகை யாழின் நாலு ஜாதிகளினாலுண்டாகும் 16 பண்களிலிருந்தே 112 பண்களுண்டாகுமென்ற தமிழ் மக்கள் வழங்கி வந்த விதியையே இவர் சொல்லுகிறதாகத் தெளிவாகக் காண்கிறோம். 5. கிராம இராகங்களிலிருந்து பாஷா இராகங்களும் பாஷா இராகங்களிலிருந்து விபாஷா இராகங்களும் விபாஷா இராகங்களிலிருந்து அந்தர பாஷா இராகங்களும் உண்டாயிற்றென்று சொல்வதைக் கவனிக்கையில் (1) கிராம இராகங்கள் என்பது நால்வகை யாழ்களென்றும் (2) பாஷா இராகங்களென்பது நாற்பெரும் பண்களிலிருந்துண்டாகும் நவ்வாலு ஜாதிப் பண்களென்றும் (3) விபாஷா இராகமென்பது 16 ஜாதி பண்களிலிருந்துண்டாகும் 112 பண்களென்றும் (4) அந்தர பாஷா இராகங்களென்பது 112 பண்களிலிருந்துண்டாகும் ஜன்னிய இராகங்களென்றும் எண்ண இடமிருக்கிறது. பூர்வம் தமிழ் மக்களின் கான முறையில் வழங்கி வந்த விஷயங்களை ஒருவாறு விசாரித்து எழுதியிருக்கிறதாக நாம் இங்கே சந்தோஷப்படக்கூடியதாயிருக்கிறது. ஆனால் காந்தார கிராமத்தின் அலகுமுறைக்குத் திட்டமான கணக்குக் கிடைக்காமையினால் தேவலோகத்திற்குப் போய்விட்டதென்று சொல்லுகிறார். மத்திமக் கிராமத்துக்கும் அப்படியே அலகு சரியாயில்லை. 6. சப்த சுரமும் மூன்று கிராமமும் 21 மூர்ச்சனைகளும் 22 சுருதிகளுமிருக்கிறதென்றும் அதிலிருந்து இராகம் உண்டாகிறதென்றும் சொன்னவர் 22 சுருதிகளுக்கு விபரஞ் சொன்னதாக இங்கே சொல்லப்படவில்லை. ஆனால் சுருதிகள் பதினாலும் மூர்ச்சனைகள் பதினாலும் பூமியில் மனுஷர்களால் பாடப்படுகின்றன. மற்றவை சொர்க்கத்தில் பாடப்படுகின்றன என்று சொல்லுகிறார். இதில் சுருதிகள் 14 என்பதை 22 சுருதிகளில் 14 என்று நினைப்போம். ஆனால் அவர் ஒருவன் தன் சாரீரத்தினால் சாதாரணமாய்ப் பாடக்கூடிய 2 ஸ்தாயிகளில் வழங்கி வரும் 14 சுரஸ்தானங்களைக் குறிக்கிறாரென்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மந்தர மத்திய தாரமென்று மூன்று ஸ்தாயிகள் சொல்லியிருந்தாலும் பூர்வ இசைத் தமிழ் நூல்களில் மெலிவு, சமம், வலிவு என்ற மூன்று ஸ்தாயிகளிலும் இரண்டு ஸ்தாயி சுரங்களே பாடப்பட்டு வந்ததாக அதாவது 14 கோவைகள் பாடப்பட்டு வந்ததாகத் தெளிவாகக் காண்கிறோம். ஆனால் மூன்று ஸ்தாயிகளிலும் பூர்ணமான சஞ்சாரம் செய்வது மிகக் கடினமென்றே சொல்ல வேண்டும். அதாவது மெலிவிற் கெல்லையாய் நின்ற ஷட்ஜம முதல் வலிவிற் கெல்லையாய் நின்ற தாரம் வரை மூன்று ஸ்தாயிகள் பாடுவது கூடிய காரியமல்லவென்பதே. இதையே இங்கே சொல்லுகிறார். 7. ரசம் அல்லது சுவைகளுக்குரிய சுரங்களைச் சொல்லுகிறார். தைவதம், அச்சம், துன்பம் முதலிய சுவைகளில் உபயோகப்படுகிறது என்கிறார். "விளரிப் (த) பண் பண்ணினார் பாணர்" என்பதற்கு இரங்கினார் பாடும் பண்ணாகுமென்று கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டான் பொருள் சொல்லுகிறார். இரங்கல் என்பது அழுதல், உருகல், துன்பப்படல் முதலிய அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது. இது போலவே காந்தாரம் நிஷாதம் ஆகிய சுரங்கள் கருணா ரசத்தில் உபயோகப்படும் என்று சொல்லுகிறார். காந்தார நிஷாதங்கள் ஒன்றற்கொன்று இணை சுரங்களென்றும் கைக்கிளையுள் தாரம் தோன்றும் என்பதைக் கொண்டும் தாரக்கிராமம் அல்லது காந்தாரக் கிராமம் என்பதில் தாரம் காந்தாரம் என்பவை ஒரே பொருத்தமுடையவையென்றும் கிராமமுடையவையென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம்.
|