பக்கம் எண் :

648
பரிபாடலில் காணப்படும் இராகங்கள்.

யவரவ ரேவ லாளனு நீயே
யவரவர் செய்பொருட் கரணமு நீயே.
கடவுள் வாழ்த்து. கடுவன் இளவெயினனார் பாட்டு.
பெட்டனாகனார் இசை. பண்ணுப்பாலையாழ்.

கார்மலி கதழ பெயறலை யேற்ற
நீர்மலி நிறைசுனை பூமலர்ந் தனவே
தண்ணறுங் கடம்பின் கமழ்தா தூதும்
வண்ணவண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே
யடியுறை மகளி ராடுந் தோளே
நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே
வாகை யொண்பூப் புரையு முச்சிய
தோகை யார்குரன் மணந்து தணந்தோரை
நீடன்மின் வாருமென் பவர்சொற்போன் றனவே
நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன
மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின
வழுகை மகளி ருழுவை செப்ப
நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள்
வார்குலை யவிழ்ந்த வள்ளிதழ் நிரைதொறும்
விடுகொடிப் பிறந்த மென்கைத் தோன்றி
பவழத் தன்ன செம்பூத் தாஅய்க்
கார்மலிந் தன்றுநின் குன்று போர்மலிந்து
சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே
கறையில் கார்மழை பொங்கி யன்ன
நறையு ணறும்புகை நனியமர்ந் தோயே
கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
யெழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே
பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச்
சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே
யிருபிறப் பிருபே ரீர நெஞ்சத்
தொருபெய ரந்தண ரறனமர்ந் தோயே
யன்னை யாதலி னமர்ந்தியா நின்னைத்
துன்னித் துன்னி வழிபடு வதன்பய
மின்னு மின்னுமவை யாகுக
கொன்முதிர் மரபினின் புகழினும் பலவே.

எ-து-பருவங்கண்டழிந்த தலைமகள் கேட்ப முருகவேளைப் பரவுவாளா யிப்பருவத்தே தலைமகன் வருமென்பதுபடத் தோழி வற்புறுத்தியது.

கேசவனார் பாட்டு. இசையுமவர். பண்ணோ திறம்.

இப்பாடல்கள், தஞ்சை, அரண்மனை வைத்தியர் லெட்சுமண பிள்ளையவர்கள் குமாரரும் கலியாண சுந்திரம் பாடசாலைத் தமிழ்ப் பண்டிதருமாகிய உலகநாதபிள்ளையவர்களால் மிகப் பழைமையான வைத்தியச் சுவடிகளுக்குள்ளிருந்து எழுதப்பட்டன.