பக்கம் எண் :

649
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

மேற்கண்ட பரிபாடல்களைப் போலவே வேறு அநேக பாக்களும் ஒருவர் செய்யுள் செய்யவும் மற்றொருவர் பண் அமைக்கவும் பெற்று வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இராகத்தின் பெயரும் சொல்லப்படுகிறது. சில பாக்கள் செய்தவராலேயே இராகம் அமைக்கப் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. இதனால் பூர்வத்தோர் வழக்கத்திலிருந்த செய்யுள்கள் யாவும் இராகத்தோடு பாடக்கூடியவைகளாகவே யிருந்தனவென்று நாம் அறிகிறோம். அவைகளில் அந்நிய பாஷைகள் விரவாத மேம்பாடும் பொருட்செறிவும் பக்தியின் சுவையும் சிறந்து விளங்குகின்றன. இவ்வளவு மேன்மை பெற்று விளங்கிய இனிய தமிழும் அத்தமிழுக்குரிய பல கலைகளும் பேணுவாரற்ற தமிழ் மக்களாலேயே குறைவுபட்டனவென்று நினைக்க பல ஏதுக்களிருக்கின்றன. மக்கள் பெரியவர்களாய் வளர்ந்து நன்றி மறந்து போன பின் வயது முதிர்ந்த தள்ளாத தாய் தந்தையர் பாடி பரதேசிகளான மற்றவரால் ஆதரிக்கப் படுவதைத் தற்காலத்திலும் பார்க்கிறோமே. அது போலவே பூர்வம் தமிழ் நாடும் முச்சங்கங்களும் அழிந்து போன பின் தமிழின் அருமை தெரிந்த ஆரியராலும் மற்றவராலும் பேணப்பட்டும் உரை எழுதப்பட்டும் ஒருவாறு நிலைத்திருக்கிறது. இவைகளில் இலக்கண இலக்கிய சம்பந்தப்பட்ட நூல்கள் ஒருவாறு கவனிக்கப்பட்டனவேயொழிய சங்கீதத்திற்குரிய பூர்வ நூல்கள் பேணப்பட்டதாகத் தெரியவில்லை. என்றாலும் உரையாசிரியர்கள் காலத்திருந்த தமிழ்நாட்டுச் சங்கீத வழக்கம் அங்கங்கே காணப்படுகிறது. அவர்கள் காலத்திருந்த இசைத் தமிழில் வழங்கி வந்த பல அம்சங்களை ஒன்று சேர்த்து எழுதியிருப்பார்களானால் உலகத்திலுள்ள சங்கீத நூல்கள் யாவற்றிற்கும் தமிழ்ச் சங்கீதசாஸ்திரமே உயர்ந்ததாயிருக்குமென்பதற்கு யாதொரு சந்தேகமுமில்லை.

II. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்ததாகச் சொல்லப்படும் அலகுமுறைக் கணக்கைப் பற்றிய சில குறிப்புகள்.

இசைத் தமிழ் நூல்கள் அழிந்து அநேக ஆயிர வருஷங்கள் ஆனபோதிலும் கர்நாடக சங்கீதமே சிறந்ததென்றும் சாஸ்திர முறைமையுடையதென்றும் மற்றவர் கொண்டாடும்படியான மேன்மையை அனுபவத்திலுடையதாயிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் நாலு யாழ் வகைகளையும் அவற்றின் நவ்வாலு ஜாதிப்பண் வகைகளையும் அவற்றின் அலகு முறைகளையும் நாம் கவனிப்போமானால் சாஸ்திர முறையிலும் தற்காலத்திலுள்ள சங்கீத சாஸ்திரங்கள் யாவற்றிற்கு மேலானவையென்று சொல்லக்கூடியதயிருக்கிறது. இவ்வளவு மேன்மை பொருந்திய இசைத் தமிழின் வசனங்களை ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது அங்கங்கே முன் பின்னாகப் பொருள்படும் சில தவறுதல்கள் காணப்படுகின்றன. முக்கியமாக அலகு முறையில் அதைக் காண்போம்.

ச-ப முறையாக வலவோட்டாகவும் ச-ம முறையாக இடவோட்டாகவும் சுரங்கள் பிறக்கின்றனவென்று சொல்லுமிடத்தில் அலகு குறைந்து வரும் சுரங்களும் சொல்லப்படுகின்றன. எப்படியென்றால் ச-ப 13ம் ச-ம 9ம் வர வேண்டுமென்று சொன்ன இடத்தில் சில சுரங்கள் ச-ப 13க்குப் பதில் 12 ஆகவும் 11 ஆகவும் வருகின்றன. அப்படியே ச-மவும் 9க்குப் பதில் 10 ஆகவும் 11 ஆகவும் வருகிறது. இப்பேர்ப்பட்ட ஒரு மயக்கம் பல இடங்களில் காணப்படுகிறது. ஆகையால் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் இருக்கிறதென்று யாவரும் சொல்லும்படியாக நேர்ந்தது. இதன் இரகசியம் தெரியாத மற்றவர் பலவாறாக எழுதவும் சொல்லவும் நேரிட்டது. ஒரு ஸ்தாயியில் 22 சுருதியுண்டென்று சொல்லும் கான முறை தற்கால வழக்கத்திற்கு ஒத்துவராதென்று மற்றவர் சொல்வது போல நானும் சொல்வதோடு ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தான் உண்டென்று சாதிப்பவர்களுக்கு அப்படி ஒரு காலத்தும் இருந்ததில்லை என்று நிச்சயம் சொல்லுகிறேன்.