இதை வாசிங்குங் கனவான்களே! இச்சங்கீத சாஸ்திரம் மேன்மையுடையதாயிருந்தது பற்றித் தெய்வம் அதில் பிரியப்பட்டதென்றும், பக்தர்களும் அதைக் கொண்டே பகவானை ஆராதித்தார்களென்றும், இராஜாக்களும் அவர் தேவிகளும் புத்திரிகளும் பிரபுக்களும் ரிஷிகளும் மிகுதியாய் உபயோகப் படுத்தி வந்தார்களென்றும் இதன் முன் பார்த்தோம். இவ்வழக்கமே தற்காலத்திலிருக்கிறதா வென்று பார்ப்போமானால் தெய்வத்தைப் பிரார்த்திக்கும் எவரும் தேவராப் பண்களை மனமுருகப் பண்ணுடன் பாடாதிரார். இரவில் தனித்துச் செல்லும் ஒரு கூலிவேலைக்காரனும், கப்பறை ஏந்தி யாசிக்கும் ஒரு யாசகனும், அன்னக்காவடி எடுக்கும் பரதேசியும், உபாதானம் வாங்கும் தாதனும் உள்ள முருகிய இன்னிசையுடன் பக்திரசமான பண்களைப் பாடிவருகிறதை நாம் பார்க்கிறோம். மேற்றிசையார் தங்கள் ஆலயத்தில் கடவுளை வணங்குகையில் இராஜன் முதல் தெருக்கூட்டுகிற ஏழைவரையும் சிறியவர் பெரியவரென்ற பேதமில்லாமல் ஏகோபித்துப் பாடுகிறதை நாமறிவோமே. இப்படிப்பட்ட மேன்மை பொருந்திய சங்கீத சாஸ்திரத்தை எழுதிய நம்முன்னோர் அதன் மேன்மையான சில இரகசியங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் குருமுகமாய்க் கேட்டுக் கொள்பவர்க்கென்று சில மறைப்பும் வைத்திருந்தார்களென்பதை நான் மிகவும் வருத்தத்தோடு சொல்ல வேண்டியதாயிருக்கிறது. வாதம் வைத்தியம் யோகம் ஞானம் முதலிய சாஸ்திரங்களில் மறைப்பு வைத்திருக்கிறதாகச் சித்தர் முதலியவர்கள் தாங்களே நேரில் சொல்வது போல இதிலும் வைத்திருக்க வேண்டுமென்று திட்டமாய்த் தெரிகிறது. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளின்னவென்று விசாரிக்கப் புகுந்த நம் சந்தேகங்களை நீக்குவதற்கு அவை மிகவும் உதவியாயிருக்கு மாதலால் அவைகளின் முக்கியமான சில அம்சங்களை இதன்பின் பார்ப்போம். "பனியை நம்பி உழவந்த கதையைப்போல பாடினார் மறை பொருளாய்ப் பாடினாரோ" என்றதினால், தெரிந்து கொள்ளக் கூடிய விவேகிகளுக்கு கஷ்டத்தின் மேல் தெரியும் படியாகவும், அப்படிக்கில்லாமல் அரைகுறையாய்ப் பார்ப்பவர்க்கு விளங்காமலிருக்கும் படியாகவும் எழுதியிருக்கிறார்களென்பது, "மேம் பாடுபட்டவர்க்கே எய்தும் எய்தும் மற்றவர் இங்கேன் பாடுபட்டு உழல்வரே," என்பதினால் தெளிவாய்த் தெரிகிறது. இப்படித் தங்களுடைய பாஷைத் திறமையையும் கல்வித் திறமையையும் ஒருங்கேசேர்த்து மற்றவர் எளிதிலறிந்து கொள்ளாதபடி புதைபொருளாய் நூல்களில் சொல்லிவைத்தார். எல்லாரும் எளிதாயறிந்து கொள்ளாதபடி புதைபொருளாய் நூல்களில் சொல்லிவைத்தார். எல்லாரும் எளிதாயறிந்து கொள்ளக்கூடிய ஒரு பெரும் இரகசியத்தைப் பேணித் தகுதியுள்ளவனுக்குச் சொல்வதே அவர்கள் நோக்கம், உத்தமமான ஒரு பொருளைத் துர்விநியோகஞ் செய்யாதபடி பத்திரம் பண்ணினதே யொழிய வேறில்லை. இப்படிப்பத்திரம் பண்ணினது உத்தமமானாலும், உத்தமமான சீஷனுக்குஞ் சொல்லாமல் மறைத்ததே அனுபோகத்திற்கு இல்லாமற் போய்விட்டதற்குக் காரணம். "எல்லார் கண் முன் நிற்கும் எடுத்துரைக்கும் குரு அருளில்லாமற் போனால் சொல்லாலும் வாராது" என்றபடி குரு பரம்பரையாய்க் கேட்டுப் போற்றப் படவேண்டுமென்ற கொள்கை யுடையவர்களாயிருந்தார்களென்பது பிரத்தியட்சமாய்த் தெளிவாகிறது. "சொன்னால் வெகு சூட்சம், சொல்லார் பெரியோர்" என்றபடி சிலப்பதிகாரத்தில் தென்னிய சங்கீதத்தைப்பற்றிச் சொல்லிய சில வரிகளிலுள்ள இரகசியத்தையும் இங்கே கவனிப்பது நமக்கு மிகவும் உபயோகம்.
|