பக்கம் எண் :

656
பூர்வ இசைத்தமிழ் நூல்களின் மறைப்பும் அம் மறைப்பு நீங்கிய முறையும்.

IV. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இத்தனை என்று சொல்லும் பூர்வ நூல்களின் மறைப்பும் அம் மறைப்பு நீங்கிய முறையும்.

இசைத்தமிழில் வழங்கிவந்த சுருதிகள் 22 என்பதையும் அவைகளில் 7 சுரங்களுக்கும் இத்தனை இத்தனை அலகுகள் வரவேண்டுமென்பதையும் வட்டப்பாலைச் சக்கரத்தால் பலதடவைகளிலும் பார்த்திருக்கிறோம்.

பரதர், மதங்கர், கீர்த்திதரர், கம்பலர், அசுவதரர், ஆஞ்சநேயர், அபினவகுப்தர் சாரங்கதேவர் போன்ற வடமொழிச் சங்கீத நூலாசிரியர்களும் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருகின்றனவென்று சொல்லியிருக்கும் முறைகளையும் தெளிவாகக் காண்கிறோம்.

பூர்வ தமிழ்மக்கள் பல்லாயிர வருடங்களுக்கு முன்னாகவே குரல்-இளி முறையாய் வல முறையாகவும் உழை-குரல் முறையாய் இடமுறையாகவும் சுரங்கள் கண்டுபிடித்து இசைத் தமிழ் முறையிற் பயின்று வந்திருக்கிறார்களென்று பலதடவைகளிலும் இதன்முன் சொல்லியிருக்கிறோம். அவர்கள் பயின்று வந்த கந்தர்வத்தில் வழங்கிய அலகுகள் 22.

கடைச் சங்ககாலத்தின் பிற்பகுதியில் காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டுவந்த கரிகாற் சோழனையும், அவன் காலத்தில், யாழ்வாசிப்பதில் திறமை பெற்றிருந்த மாதவியையும் கோவலனையும், கண்ணகியின் கற்பையும், பாண்டிய நாட்டின் பல அரிய விஷயங்களையும் எழுதிய சேரன் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளையும், அவர் காலத்திருந்த நக்கீரரையும், பாண்டியன் நெடுஞ்செழியனையும், இலங்கை மன்னன் கயவாகுவையும் சற்று முன் பின்னாக முதலாவது நூற்றாண்டிலிருந்தவர்களாக இதன் முன் பார்த்திருக்கிறோம். இவர்கள் காலத்திலேயே இசைத்தமிழ் மிக விரிவுடையதாய் இருந்ததென்றும் அதில் தமிழ்மக்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்களென்றும் நாம் அறிகிறோம்.

இம்முதல் நூற்றாண்டுக்குமுன் கடைச்சங்க காலத்திலெழுதிய பரிபாடலாலும், அதற்கு முன் ஊழியில் முதற் சங்ககாலத்தின் கடைசியில் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையத்தில் அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேறிய தொல்காப்பியத்தாலும் முதற் சங்ககாலத்தில் அகத்தியரால் எழுதப்பட்ட இசைத்தமிழ்ச் சூத்திரம் சிலவற்றாலும், நாரத சூத்திரத்தாலும் லெமூரியா நாட்டிலிருந்த தென்மதுரையிலும் அதன் பின் கபாட புரத்திலும் அதற்குப் பிறகு வடமதுரை யென்றழைக்கப்படும் கூடல் ஆலவாயிலும் சுமார் 12,000 வருடங்களாகவும் அதற்கு முற்பட்டும் இசைத்தமிழ் மிக மேன்மைபெற்று வழங்கிவந்திருக்கிறதென்று பலவிதத்தாலும் அறிகிறோம்.

அக்காலத்தில் இசைத்தமிழில் வழங்கி வந்த அலகுகள் அல்லது சுருதிகள் இருபத்திரண்டே. மிகச் சமீப காலத்தில் அதாவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பரதர் எழுதிய பரத சாஸ்திரத்தில் வழங்கிய சுருதிகள் இருபத்திரண்டே. அதன்பின் அதை அனுசரித்து சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவர் வழங்கி வந்த சுருதிகளும் 22 என்று இதன் முன் பலவிதமாய்ப் பார்த்திருக்கிறோம். இப்படி முன்னோர்களால் தமிழிலும் அதன்பின் சமஸ்கிருதத்திலும் சொல்லப்பட்ட 22 சுருதிகளுக்கு மாறாகச் சொல்வது நியாயமல்ல வென்று நாம் யாவரும் நினைப்போம்.