| 1. | சீர்பூத்த விமயமலை யெனப்பொலியும் பொதியத்திற் சிறந்து தோன்றிப் பேர்பூத்த தமிழமுதத் தொடும்பழகிக் கங்கையிலும் பெருமை வாய்ந்த நீர்பூத்த பொருநைநதி பாய்தலினாற் பலவளங்க ணிறையப் பெற்று நார்பூத்த பெரியோர்கள் வாழ்வதற்கு நல்லிடமாம் பாண்டி நாட்டில், |
| 2. | பாற்கடலின் மீதுகருங் கார்க்கடல்போற் கண்வளரும் பரமன் மார்பிற் சேற்கருங்கட் டிருமகளுந் திசைமுகனா வமர்ந்தருள்பா மகளுஞ் சேர்ந்துநாற்கடல்சூ ழவனியுளோர் கொண்டாட வீற்றிருக்கு நலம தாகி மேற்கவிஞர் வாழ்தலுறு சாம்பவா னோடையெனும் பதியின் மேவி, |
| 3. | தங்குபுக ழுடைச்சான்றோர் குலத்தலைமை பெறுமுத்து சாமி வேளும் மங்கையருக் கரசியா மன்னம்மா ளெனும்புனித மாது முன்செய் பொங்குதவப் பயனாகிப் பிறந்தமுதற் குமரனெனப் பொலியுஞ் சீரான் சங்கநிதி யெனப்புலவ ருளங்களிக்கத் தருபுகழ்சேர் தகைமையுள்ளோன், |
| 4. | அன்னையினு மன்புடையா னமைதருமின் சொல்லுடையா னறிவொ ழுக்கந்துன்னுபெரும் புகழுடையான் சொல்லுறுதி மாறாமை யுடைய தூயோன் தன்னிகரி லாதகரு ணானந்த சித்தனருள் சார்த லாலே மன்னுபதி னெண்சித்த நூல்வகையு மதன்பொருளு மனத்தினோர்ந்தோன், |
| 5. | அலர்தலைமா நிலத்திலருக் கனைக்கண்ட பனியென்ன வடைந்தோர் நோய்கள்விலகியிட நன்மருந்து மேதகுசா லையும்வளஞ்சேர் சோலை தானும் குலவுகரு ணானந்தன் பெயராலே குயிற்றியறங் குறைவி லாது நிலைபெறுபொன் மாடமலி தஞ்சைநகர் தனிலென்று நிறுவி யுள்ளோன், |
| 6. | இயலிசைநா டகமூன்று மியைந்திலகு தமிழ்க்கடலை யினிதி னோர்ந்து மயலறுமம் மூன்றினிசை நூற்பெருமை யிதுவென்ன மகித லத்தில் நயமொழிசே ரிசைப்புலவ வசைக்களத்தி னாலாறு சுருதி நாட்டி வியலுறுயாழ்க் கருவியிடை யுள்ளங்கை நெல்லியென விளக்கிப்பின்னும், |
| 7. | முன்னாளிற் றமிழ்நாட்டின் பெருமையுமந் நாட்டினின்முத் தமிழோர் வாழ்ந்துபன்னாளு மத்தமிழை யியலிசைநா டகமென்னப் பகுத்துக் காட்டிச் சொன்னார்க ளென்னவதன் பெருமையுமத் தூயதமிழ்ப் பாடைக்கெல்லாம் எந்நாளுந் தாயாகு மென்றுமதற் கிசையபல வேதுக் காட்டி, |
| 8. | ஐந்துவகை நிலப்பண்ணு மதற்குரிய யாழின்வகை யமைப்புங் கூறி மைந்துடைய வெழுவகைப்பா லையுமவற்றின் வகைநலமும் வகுத்து மாந்தர்சிந்தைமகிழ்ந் திடவினிக்குந் தேவாரப் பண்வகையுஞ் சீர்த்தி மிக்க செந்தமிழிற் பொருண்டைசொன் னடைசேர வசனத்திற் சிறப்ப தாக, |
| 9. | என்றுமழி யாதுகரு ணாமிருத சாகரமென் றினிய பேராற் றுன்றுசுவை நூலியற்றிச் சுருதிவல்லோர்க் கினிதாகத் தொகுத்து ரைத்தான்நன்றுநம தரசர்மகிழ்ந் துதவியராவ் சாகேப்பெ னலமுந் தாங்கிச் சென்றுபுகழ் திசைதோறுஞ் சிறக்குமா பிரகாமென் சீமான் றானே. |