பக்கம் எண் :

665
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

7. மயக்க நிவிர்த்தி.

இவ்விஷயத்தில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. இவ்விடமே வட்டப்பாலையில் மயக்கம் உண்டாகும் இடம். தொட்ட சுரத்திற்கு ஆறாவது சுரமாகிய சிம்மத்தினின்ற கைக்கிளையைப் பகையென்கிறார். ஆனால் சிம்மத்தில் கைக்கிளை எப்படி வந்ததென்று கவனிப்போமானால், அது முறைபிசகாய் வந்திருக்கிறதென்று நாம் தெரிந்து கொள்வோம். விளரியில் கைக்கிளை தோன்றும் என்று சொன்னவர் தாமே சிம்மத்தில் கைக்கிளையையும் தாரத்தையும், கும்பத்தில் விளரியையும் கைக்கிளையையும் போடச் சொல்லியிருக்கிறார்.

விளரியுள் கைக்கிளை தோன்றும் என்று சொல்லிக் கும்பத்திற்கு ஆறாம் இடமாகிய சிம்மத்தில் கைக்கிளை என்றது மயக்கம். ஆறாமிடம் பகைத்தானம்.

ஆனால் "மயங்கா மரபினையுடைய பதினாலு கொவை" என்று உரையாசிரியரும் "பிழையாமரபின் ஈரேழ்கோவையை" என்று நூலாசிரியராகிய இளங்கோவடிகளும் சொல்வதை நாம் கவனிக்கையில், எவ்விதத்திலும் பிழை யில்லாத முறையையுடையது என்று உறதி சொல்வதாக நாம் சற்று ஆலோசிக்க வேண்டும்.

இதோடு அரும்பதவுரையாசிரியர் கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டான் என்பவர் 'இளிமுதலாகக் கைக்கிளை ஆறாவதாம்' 'இளிக்குக் கைக்கிளை பகை. தங்கள் மயக்கத்தாலே பகை நரம்பிலே கை சென்று தடவ' என்றார். தங்கள் அறியாமையினால் விளரிக்கு ச-ப முறையாயுள்ள கைக்கிளையைச் சிம்மத்தில் எழுதிக்கொண்டு அதை ஆறாவது சுரமாகக் கணக்கிட்டுக் கொண்டால் அது பகைதானே. தொட்ட இராசிக்கு ஏழாம் இராசியில் நின்றசுரம் ச-ப வாகும். இம்முறைப்படியே, பின்னுள்ள வட்டப்பாலைச் சக்கரத்திற் காண்க.

தாரத்தில் உழை தோன்றும் இது மீனத்திலிருந்து 7-ம் இராசியான் துலாம்
உழையுள் குரல் தோன்றும் இது துலாத்திலிருந்து 7-ம் இராசியான் இடபம்
குரலுள் இளி தோன்றும் இதுஇடபத்திலிருந்து7-ம் இராசியான் தனுசு
இளியுள் துத்தம் தோன்றும் இதுதனுசிலிருந்து7-ம் இராசியான் கடகம்
துத்தத்துள் விளரி தோன்றும் இது கடகத்திலிருந்து7-ம் இராசியான் கும்பம்
விளரியுள் கைக்கிளை தோன்றும் இது கும்பத்திலிருந்து 6-வது இராசியான சிம்மம்

இவ்விடத்தில் ஏழாவது இராசியாகிய கன்னியில் வரவேண்டியதற்குப் பதில் சிம்மத்தில் சொல்லியிருப்பது மயக்க வைக்குமல்லவா? இம்மயக்கத்தை நீக்கிக்கொள். அதற்குமேல் வரும் எதுவும் பிழையாக மாட்டாது. அவைகளில் வரும் பிழைகளை நீ நீக்கிக்கொள்வாயாக; அதை நீக்கி்க் கொண்டால் வட்டப்பாலையின் இரகசியம் நன்றாய் விளங்குமென்று சொல்வதாக நாம் நினைக்க வேண்டும்.