காலத்தில் பிராண வாயுவின் இயக்கத்தை நூறு பாகமாக்கி அவைகளில் ஒவ்வொன்று குறையும்போது ஆயுள் குறைவையும் அங்கக் குறைவையும் சுகக் குறைவையும் அகால மரணத்தையும் கணிக்கும் சீவோற்பத்தி சாஸ்திரத்தையும், பிராண வாயுவை நூறு, இருநூறு மாத்திரையின் அளவாகக் கும்பித்துப் பழகி நித்திய தத்துவம் பெறும் வழி கூறும் யோக சாஸ்திரத்தையும் அறிந்த மகான்கள் பிராண வாயுவினாலேயே உண்டாகும் நாதத்திற்குக் கணக்குச் சொல்லப் புகுந்த என்னை மன்னித்து அங்கீகரிக்கும்படியாகப் பிரார்த்திக்கிறேன். அண்ட புவன சராசரங்களுக்கு வித்தாய் நின்ற பிரம்மத்தில் விருப்பம் தோன்ற விருப்பத்தில் நாதம் (வார்த்தை) உண்டாக அவ்வார்த்தையினால் புல் பூண்டு தாவர சீவகோடிகள் அத்தனையும் உண்டாயின. அதுபோலவே காரணசரீரத்தில் விருப்பமாகவும் சூக்கும சரீரத்தில் நாதமாகவும் தூல சரீரத்தில் செயலாகவும் ஒவ்வொரு சீவனிலும் முதல்வனே விளங்கி நிற்கிறான். இப்படி பேரேண்டமாகவும் சிற்றண்டமாகவும் நின்ற அவனை வெளித் தோற்றத்தைக் கொண்டு வெவ்வேறாக நினைத்தார் உலகத்தார். ஒரு புள்ளியினின்று வெவ்வேறு அளவுள்ள எண்ணிறந்த வட்டங்கள் உண்டாகியிருந்தாலும் நடு நிலையாயுள்ள புள்ளி ஒன்றே என்பதுபோல எழுவகைத் தோற்றத்திற்கும் உட் பொருளாயிருந்த ஒருவனே கர்த்தன் என்று கண்டார் பெரியோர். காணப்பட்ட யாவும் அவனாலேயே உண்டாக்கப்பட்டனவென்றும் எல்லாம் அவனுக்காகவே உண்டாக்கப்பட்டதென்றும் அவனையல்லாமல் உண்டாக்கப்படவில்லை யென்றும் உண்டாக்கின ஒவ்வொன்றிலும் அவனே சீவனாய் விளங்கி நிற்கிறானென்றும் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அண்டபிண்ட சராசரங்களின் செயல் அத்தனையும் அவனுடைய திருவிளையாட்டென்றும் அவனுடைய சித்து விலாசமென்றும் சொன்னார்கள். ஒவ்வொன்றும் அவனாலேயே செயல் பெற்று விளங்குகிற தென்று அறிந்தார்கள். சூக்கும சரீரத்தில் வார்த்தையாய் விளங்கிய கர்த்தன், எப்படி சப்த சுரங்கள் பன்னிரு ஸ்தானத்தில் 16 கலையாய் எவ்வேழு செயல் பெற்றுப் பல தாய் இராகமாய்ப் பண், பண்ணியம், திறம், திறத்திறம் அல்லது சம்பூரணம், சாடவம், ஒளடவம், சவராந்தம் என்னும் சுர பேதங்களை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் உடைய எண்ணிறந்த ஜன்னிய இராகங்களாகி அவைகள் ஒவ்வொன்றும் மிக விரிந்த பிரஸ்தாரத்தை யுடைந்தாயினவோ அப்படியே நாத சொரூபியாய் விளங்கி ஆனந்த நிர்த்த மிடுகிறான். விரிந்த அவன் திரு உருவாகிய நாத சொரூபத்தை சப்த சுரங்களின் விரிந்த இராகங்களால் அறிந்து அவன் செயலுக்கேற்ற அம்ச சுரங்களை அந்தந்த இராகத்திற்குச் சீவ சுரமாக வைத்துக் கானம் பண்ணினார்கள். இக்கானத்தின் முக்கியம் அறிந்த நம் முன்னோர் முதல் முதல் சுருதியை நிச்சயம் செய்து கானவிதி சொன்னார்கள். ஆன்ம லாபத்தையே பெரிதாக நினைத்த நம்முன்னோர் தெய்வத்தை அறிவதும் அம்மயமாய்ச் சீவிப்பதையுமே விரதமாகக் கைக்கொண்டு வந்தார்கள். அவ்வறிவு முற்றுப்பெற முதல் முதல் இவ்வண்டத்தின் பஞ்சீகரண தத்துவங்கள் இருபத்தைந்தையும் அவற்றில் தலையாய் இருபத்தைந்தாவது தத்துவமாய் நின்ற அன்னத்தையும், அன்னத்தினின்றுண்டான அன்னமய கோசத்தின் இருபத்தைந்து தத்துவங்களையும், அவற்றிக்குத் தலையாய் இருபத்தைந்தாவது தத்துவமாய் நின்ற இச்சையையும் (மோகத்தையும்) இச்சையினால் பந்தப்பட்ட சூக்கும சரீரத்தின் இருபத்தைந்து தத்துவங்களையும்,
|