பக்கம் எண் :

786
கர்நாடக சங்கீதத்தின் வழங்கிவரும் சுருதிகளின் கணக்கு. முகவுரை.

படியுள்ள தேவதத்துவங்களையும் சக்திகளையும் ஒன்றின்பின்னொன்றாயறிந்து தன் அனுபோகத்துக்குக்கொண்டுவந்து முடிவில் சத்துச் சித்து ஆனந்தமாய் விளங்கும் பிரம்ம பதமடைகிறான்.

ஒன்றான மெய்த் தெய்வத்தையும் அவர் பிரதி நிதியாய் விளங்கும் பரமாத்துமாவையும் அறிவதே நித்தியசீவனென்று பக்தர்கள் நினைத்து என்றுமழியாத நித்திய சீவனைப்பெற இரவு பகல் இடைவிடாமல் விசாரித்தார்கள். அவரவர்கள் தவத்திற்கேற்பப் பெற்ற காரணசரீரத்தின் சக்திகளை மற்றவரடையும் பொருட்டுச் சீவகாருணியத்தின் பெருக்கால் நூலாகஎழுதிவைத்தார்கள். தூல சூக்கும காரணசரீரத்தின் ஒன்பது வகைகளையும் அவற்றில் விளங்கும் ஒன்பது குணங்களையும் விளக்கிச்சொல்லவந்த இடத்தில் அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் சூக்குமத்திற்கும் காரணத்திற்கும் பஞ்ச பூதங்களையும் பஞ்சீகரணச்செயல்களையும் ஒவ்வொன்றாய் மிகத் தெளிவாயாராய்ந்து சொன்னார்கள்.

தூல சூக்கும காரணம் மூன்றும் சரீர மென்றும், அவற்றிற்கு மனம் வாக்குக் காயம் இடமென்றும், ஆணவம் காமம் மாயை மலமென்றும், சாத்வீகம் ராஜசம், தாமதம் குணமென்றும், சுவர்க்கம் மத்தியம் பாதாளம் லோகமென்றும், சூரியன் சந்திரன் அக்கினி மண்டலமென்றும், மந்தரம் மத்தியம் தாரம் ஸ்தாயிகளென்றும், அகார உகார மகாரம் அட்சரமென்றும், ஆக்கல் காத்தல் அழித்தல் தொழில்களென்றும் குறிப்பினாற் சொல்லி அவைகள் ஒவ்வொன்றின் விவரங்களையும் அறிய ஏதுவாகும் மற்றும் அறிவையும் போதித்தார்கள். ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரையும் உள்ள சீவர்களையும் அவற்றிற்கு மேலாகிய ஏழாவது அறிவு பெற்ற தேவமானுடர்களையும் ஒவ்வொரு வர்க்கத்திலும் எவ்வேழு வகையாகப்பிரித்து அவற்றின் சூக்குமத்தையும் அறிந்துகொள்ள எழுதிவைத்தார்கள். சீவர்களைக் கெடுக்கும் இராகாதி பதின் மூன்று குணங்களையும் அவைகளை நீக்கிக்கொள்ளும் வழிகளையும் சொன்னார்கள். அண்டத்திற்கு ஒத்ததைப்பிண்டத்திற் காட்ட உபமானங்களையும் பஞ்ச பூதங்களையும் பஞ்ச பூதங்களின் சேர்க்கைகளையும் வெகு விவரமாய்ச் சொன்னார்கள். இவையாவையும் பூரணமாய் அறிவதற்குக் காரண சரீரத்தின் வித்தாய் விளங்கும் கர்த்தனின் உதவியைத் தேடினார்கள்.

சூரிய சந்திர கலையாய் ஓடும் தங்கள் பிராண வாயுவைச் சூரிய கலையில்திருப்பிக் கும்பித்து, இருகாதின் கேள்விப் புலனும், இருகண்ணின் காட்சிப் புலனும் பிராண வாயுவும் கலந்த ஓங்காரக் கம்பத்தின் நுனியில் முச்சந்தி வீதியில் கோடிசூரியப் பிரகாசமாய் விளங்கும் நந்திஒளி தரிசனங்கண்டு தாங்கள் அறியவேண்டியதும் கேட்கவேண்டியதும் காணவேண்டியதுமான யாவு மங்கே அறிந்தார்கள். அவ்வுத்தம நன்னிலை பெற்ற பக்தர்கள் தெய்வத் தோற்றம் தங்களில் பிரகாசிக்கத்தேவதூதர்களைப்போல் விளங்கினார்கள். அவர்கள் சாதிபேதமாவது மதபேதமாவது கலைபேதமாவது கொள்ளாமல் மன்னுயிர் யாவையும் தன்னுயிர்போல் நினைக்கும் உத்தம நன்னிலையையே உலகத்தவர்க்குப் போதித்தும் அனுபோகத்தில் சாதித்துக் காட்டியும் வந்தார்கள். உலகத்தைவெறுத்து தெய்வத்தையே நேசித்து வந்த அவ்வுத்தமர் நம் தென்றமிழ் நாட்டிலேயேமுந்தினவரென்றும் ஏராளமானவரென்றும் நாம் மேன்மை பாராட்டிக் கொள்ளக்கூடியதாயிருக்கிறது. தென்றதமிழ் நாட்டரசனாகிய சத்திய விரதனும் அவரோடு வந்த ஏழு முனிவர்களும் ஊழிக்குத்தப்பக் கப்பலில் வந்து வடநாட்டில் தங்கினார்களென்றும் அவர்களில் சத்திய விரதன் மூலமாக ஜனங்கள் விருத்தியானர்களென்றும் அவரே வைவசுத மனு வானாரென்றும் அறிவோம். இவ்வுத்தமர்களிருந்த குமரி நாட்டிலிருந்தே எல்லா சாஸ்திரங்களும் கலைகளும் மற்றிடங்களுக்குப் பரவினவென்றும் நாம் துணிந்து சொல்லுவோம்.