பக்கம் எண் :

787
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

அவர்கள் இயற்றிய சாஸ்திரங்கள் ஒவ்வொன்றிலும் இப் பிண்டத்திற்குரிய முக்கிய அம்சங்களையே அண்டத்திற் கண்டு அவற்றையே எழுதிவைத்தார்கள். இவ்வுண்மையே சங்கீத சாஸ்திரத்திற்கும் முக்கிய ஆதாரமென்று இதன் பின் காணலாம். அண்டத்தின் முக்கிய ஆதாரமாய் விளங்கும் தத்துவங்களையே சங்கீதத்திற்கும் ஆதாரமாகக் கண்டார்கள். தூல சரீரத்திற் சீவனாய் விளங்கும் சூக்கும சரீரத்தின் நாத சொரூபத்திற்குத் தூல சரீரத்தின் ஆதாரக்கணக்கே தகுதியான தென்று தங்கள் அனுபோகத்திற் கண்டார்கள். இவ்வனுபோகத்தைக் கண்டவர்கள் அக்கணக்கின் படியே நாத சொரூபத்தை வகுத்து அவன் திருச்செயல் விளங்க நாத பேதங்களினால் அமைந்த இன்னிசை கொண்டு அவனை வாழ்த்தினார்கள். தங்கள் ஆறாதார மூர்த்தியைத் தியானிப்பதும் துதிப்பதும் ஒழிந்த வேளையில் மக்களுக்கு உதவியா யிருக்கும் நூல்கள் எழுதியும் சீவகாருணியம் பாராட்டியும் வந்தார்கள்.

தூல சரீரத்தின் ஆறாதார ஸ்தானங்களிற் சீவன் நிற்பது போலச் சூக்கும சரீரத்தின் ஆறாதார ஸ்தானங்களில் காரண சரீரமிருக்கிறதென்று கண்டார்கள். ஓம் என்ற ஆதிநாதமானது ஆறு ஸ்தானங்களில் படிப்படியாய் உயர்ந்து ஏழு சுரங்களாயானது போல ஆதிமூலமாய் நின்ற பிரம்மமும் படிப்படியாய் ஏழு அறிவுடன் எழுவகைத் தோற்றங்களையு மடைந்தது. ஏழு தோற்றங்களை யடைந்த பிரம்மமானது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என்ற தூல சரீரத்தின் ஆறு ஸ்தானங்களிலும் சாக்கிரம், சொற்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம், அதீதம் என்ற சூக்கும சரீரத்தின் ஆறுஸ்தானங்களிலும் படிப்படியாய் உயர்ந்து பன்னிரு ஸ்தானங்களை அடைந்து காரணத்தில் லயமாயிற்று. இப்படியே ஓம் என்ற முதல் சட்சமமானது சுத்த மத்திமம் வரையிலுள்ள ஆறு சுரங்களாகி அதன்மேல் பிரதிமத்திமம் முதல் ஆறு சுரங்களாய் மொத்தத்தில் பன்னிரண்டு ஆதார ஸ்தானங்களை யுடையதாய் முதற்காரணமாகிய சட்சமத்திலேயே திரும்ப முடிவடைகிறது.

எழுவகைத் தோற்றங்கள்என்று சொல்வதை நாம் கவனிக்கையில் எட்டாவதான ஒன்று எல்லாம் தோன்றுவதற்கு ஆதாரமாயிருந்த இடமென்று தோன்றுகிறது. அதாவது ஒன்று இரண்டு முதலான எழுவகைத் தோற்றங்களும் தூல ரூபமும் சூக்கும அல்லது நாம ரூபமுமற்று முதல் வஸ்துவில் லயமடைகிற இடமாம். இது போலவே சட்சம முதலாகிய ஏழு சுரங்களும்மேலாய் எட்டாவதாயுள்ள சட்சமத்திலேயே முடிவடைகிறது. இப்படி ஆதியான ஒருவன் எழுவகைத் தோற்றத்திலும் கலந்து திரும்பத் தன் ஆதி நிலைக்கே வருவது உலகம் நடக்கும் பொருட்டு அவன் நடத்தும் திரு விளையாட்டேயாம்.

எழுவகைத் தோற்றமாய் ஏழு பருவங்களையுமடைந்து ஆனந்தக் கூத்தாடின அவன், தோற்றமும் பருவமுமற்று முத்தி நிலையை யடைகிறான். எப்படி சட்சமமானது படிப்படியாய் ஒன்றற் கொன்று தீவிரமாய் வெவ்வேறு ஸ்தானங்களையடைந்து எட்டாவதாகிய சட்சமத்தில் தன்னிலையை அடைந்ததோ அப்படியே இதுவுமிருக்கிறது.

எப்படிச் சீவனானது பன்னிரண்டு ஸ்தானங்களில் சஞ்சரித்து நிற்கிறதோ எப்படிச்சூரிய னானவன் பன்னிரண்டு இராசிகளில் சஞ்சரித்து வருகிறானோ அப்படியே பன்னிரண்டு ஸ்தானங்களில் நாதமானது சஞ்சரித்து இனிமையை உண்டாக்குகிறது.

சப்த கிரகங்களும் எப்படி பன்னிரு இராசிகளில் சஞ்சரித்து அளவிறந்த காலபேதங்களையும் சாதகச் சக்கரங்களையும் உண்டாக்குகின்றனவோ எப்படி பன்னிரு ஸ்தானங்களிலும்