பக்கம் எண் :

789
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

காப்பியர் கருத்தையும் அதன் முன் 4,000 வருடங்களா யிருந்த முதற் சங்கத்தார் கருத்தையும் அவர் தெரிந்து கொள்ள வில்லை யென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் படிப்படியாய் ஒன்று பெருக்கமுற்றும் மற்றொன்று தேய்ந்தும் வழக்கத்தி லில்லாமற் போவது கால இயற்கைதானே. இவ்வளவாவது சங்கீதத்திற்குரிய பல அம்சங்களை எழுதிவைத்தாரேயென்று நாம் மிகவும் சந்தோஷப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் 22 என்ற இடறு கல்லுக்கு ச-ப, ச-ம முறையாய் 13, 9 என்ற சுருதிக் கணக்குச் சொல்லாதிருந்தால் மிகவும் நன்றாயிருக்கும். அவர் அளவு சொன்னதினால் கானத்தில் வழங்கிவரும் சுரங்கள் ஒவ்வாமல் சுருதியைப்பற்றி விசாரிக்கும் யாவரும் தங்கள் தலையை அதில் உடைத்துக்கொள்ள நேரிட்டது.

இவருக்குச் சுமார் 300 வருடங்களுக்குப் பின்னுள்ள பாரிஜாதக்காரர், சோமநாதர் முதலியவர்கள் சுருதி விஷயத்தைப்பற்றி எழுதியிருப்பதில் சாரங்கருடைய சங்கீத ரத்னாகரத்தின் வசனங்களையும் யாழின் சுரங்களையும் அனுசரித்துச் சில சொல்லியிருக்கிறார்கள். அவைகள் பேர்களாலும் சுர ஸ்தானங்களாலும் சொல்லும் முறையினாலும் வித்தியாசப்பட்டிருக்கின்றன வென்று தெளிவாய்த்தெரிகிறது. தங்களுக்கு முன்னுள்ள வரும் சங்கீத சாஸ்திரத்தில் சந்தேக மறத்தெளிந்தவருமாக (நிஸ்சந்தேகராக) யாவராலும் கொண்டாடப்படும் சாரங்கள் நூலின் கருத்தை மாற்றவும் பிரியமில்லாமல் தங்கள் சாதனையிலிருக்கும் கர்நாடக சங்கீதத்தின் சுரங்களையும் விட்டுவிடாமல் நடுவில் மயங்கினார்களென்று தெளிவாய்த் தெரிகிறது. இதைக்கொண்டு சங்கீத ரத்னாகரத்தில் வழங்கிவரும் துவாவிம்சதி சுருதிகள் அக்காலத்திலேயே வழக்கத்திற்கு வராமல் சந்தேகத்தை உண்டாக்கக் கூடியவைகளாயிருந்தனவெ அச்சந்தேகத்தை நீக்குவதற்கும் கர்நாடக சங்கீதத்தின் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் பலர் நூல் எழுதினார்களென்றும் தெளிவாய்த் தெரிகிறது.

சுரஞானத்தைக்கொண்டு ச-ப முறையாய்ச் சுரஸ்தானங்கள் அமைக்க வேண்டியதை விட்டுவிட்டு யாழ் செய்யும் தச்சர்கள் அளந்துபோடும் பெரும்படியான ஒரு முறையைச் சொல்லிவைத்தார்கள். சுரஞானமில்லாதவர்கள் இப்படிப்பட்ட ஒரு அளவை மிகப்பெரிதான இரகசியமாக நினைப்பது வழக்கம். இதுபோலவே பைதாகோரஸ் என்ற கிரேக்கத்தத்துவ ஞானி யாழின் சுர அமைப்பில் கிடைக்கும் (2/3),(3/4) என்ற அளவை மேல் நாட்டுக்குக் கொண்டுபோயிருக்கிறாரென்று தெளிவாய்த்தெரிகிறது. இவ்வளவைக் கொண்டு வைக்கும் சுரங்கள் சுரஞானமுள்ளவர்களால் தங்கள் கானத்திற்கேற்றபடி மிக அற்பமான திருத்தம் செய்துகொள்ளப்படுகிறது. அப்படி திருத்திக்கொள்ளப்பட்டாலும் கைப்பழக்கத்தினால் அதில் வாசிக்கப்படும் இராகங்கள் சரியாகத்தோன்றினாலும் கணித முறையில் சொற்பேதமிருப்பதாகக் காண்போம். இப்பேதமும் முன்சொன்ன தச்சர்கள் அளவும் இராகங்களில் வழங்கிவரும் சூக்குமமான சுருதிகளும் சாரங்கர் சொன்ன 22 சுருதிகளும் ஒன்றாய்க் கலந்து இன்னதென்று நிச்சயிக்கக்கூடாத மயக்கம் நிறைந்த தாகிவிட்டது.

அப்படி அறிந்துகொள்வதற்கு உதவியாயிருக்கும்படி மானுட தூலத்தோற்றத்திற்கு யாழின் வடிவம் ஒத்திருக்கிறதென்பதையும் சூட்சம தேகத்திற்கு யாழ் ஓசை ஒத்திருக்கிறதென்பதையும் மனுட சுவாசத்திற்கு யாழோசையின் அலைகள் ஒத்திருக்கின்றனவென்பதையும் முதல் முதல் கவனிக்கவேண்டும்.

இரண்டாவது, ஆயப்பாலையில் வரும் பன்னிரு சுரங்களின் கணிதமுறையையும் 24 சுருதிகளின் கணிதமுறையையும் நுட்பமான சுருதிகளின் கணிதமுறையையும், தென்னிந்திய