மைத்திராயண்ணியுபநிஷத் பக்கம் 149-151. மனமானது தேகத்திலிருக்கிற அக்கிநியை எழுப்புகிறது. அந்த அக்கிநியானது வாயுவை எழுப்புகிறது. வாயுவானது மார்பில் சஞ்சரித்து மந்தரத்துவனியை உண்டாக்கிறது. அக்கிநியுள்ள கடைகிற கட்டையானது ஹிருதயத்தில் அசைவை யுண்டாக்கிறது. அதானது (அந்ததுவனியானது) அணுவாயிருக்கிறது. பிறகு (கண்டத்தினிடத்தில்) இரட்டிக்கிறது. நாக்குநுனியில் மும்மடங்காகிறது. அது (வார்த்தையாக) புறப்படுகையில் (சப்தங்களுக்கு) உற்பத்தி ஸ்தானமாக சொல்லுகிறார்கள். இதில் இருதய ஸ்தானத்திலிருந்து சத்தம் உண்டாகிறதென்றும் ஆரம்பிக்கும்போது நுட்பமாயிருக்கிறதென்றும் குரல்வளையில் இரட்டிக்கிறதென்றும் நாக்கு நுனியில் மும்மடங்காகிறதென்றும் சொல்லியிருக்கிறதாகத் தெரிகிறது. இவையாவும் சங்கீத்சாஸ்திரத்திற்குப் பொருந்தியதாகவேயிருக்கின்றன. ஆனால் ஒரு வீணைத் தந்தியின் மேருவிலிருந்த நாதமாகிய ஆதாரசட்சம் ஒன்றானால் அத்தந்தியின் பாதியில் தாரசட்சமும் அதன்மேல் மீதிப் பாதியில் அதாவது நாலில் ஒன்றில் அதிகார சட்சமும் அதன் மேற் பாதியில் அதாவது எட்டில் ஒன்றில் அதற்கு மேல் ஸ்தாயி சட்சமும் பேசுகிறதென்று இதற்கு முன் பார்த்திருக்கிறோம். அம் முறையே சாரங்கதேவரும் ஆதார சட்சம் ஒன்றானால் தார சட்சம் இரண்டாகவும் அதிதார சட்சம் நாலாகவும் போகுமென்று சொல்லுகிறார். இதையே பூர்வ தமிழ் நூல்களிலும் காண்கிறோம். வீணைத் தந்தியின் நீளத்தில் ஒன்று, அரை, கால், அரைக்கால் என்ற அளவில் ஒவ்வொரு ஸ்தாயியும் வருகிறதென்று நாம் அளிவோம். ஆனால் நாதமோ ஒன்று, இரண்டு நாலு எட்டுப் பாங்காகப் பெருத்துப்போகிறதென்று காண்கிறோம். இது யாவராலும ஒப்புக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது. நிருஸிம்ஹதாபனி உபநிஷத் ஐந்தாவது உபநிஷத் பக்கம் 418, 419, 420. 1. பிறகு தேவர்கள் பிரஜாபதியை அடியில் வருமாறு கேட்டார்கள். “எல்லாக்காமங்களையும் கொடுக்கின்றதாயும் மோக்ஷத்திற்கு துவாரமாயும். எதை யோகிகள் சொல்லுகின்றார்களோ அந்த மகா சக்கிரமென்று பெயருள்ள சக்கிரத்தை எங்களுக்குச் சொல்லும்.” அதற்கு பிரஜாபதி கொல்லுகிறதாவது; இந்த மகா சக்கரம் ஆறு அரங்களுள்ளது; ‘ஸுதர்சனம்’ என்று பெயர் கொண்டது; ஆறு ருத்துக்களும் ஆறு பத்திரங்களாக விருக்கின்றன. மத்தியில் நாபியிருக்கின்றது; அந்த நாபியில் இந்த அரங்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. மாயையினால் இது எல்லாம் சூழப்பட்டிருக்கின்றது. மாயை ஆத்மாவை தொடுகிறதில்லை. ஆதலால் இந்த ஜகத் மாயையால் வெளியில் சூழப்பட்டிருக்கின்றது. அந்த சக்கரம் எட்டு அரங்களுள்ளதகாவும், எட்டு பத்திரமுள்ளதாகவும் இருக்கின்றது. காயத்ரீ எட்டு அக்ஷரமுள்ளது; அதுடன் சேர்ந்திருக்கின்றது. ஆகையால் வெளியில் மாயையால் எல்லாம் சூழப்பட்டிருக்கின்றது. இந்த மாயை எல்லா இடங்களையும் அடைகின்றது. இந்த சக்கரம் பன்னிரண்டு அரங்களுள்ளதாகவும் பத்திரங்களுள்ளதாகவும் இருக்கின்றது புருஷன் பதினாறு கலைகளுடையவன். இதெல்லாம் புருஷன்; புரஷனுடன் சேர்ந்திருக்கின்றது. வெளியில் மாயையால் சூழப்பட்டதாக வருக்கின்றது. இந்த சக்கரம் முப்பத்திரண்டு அரங்களும் பத்திரங்களுமுள்ளது. அனுஷ்டுப் மந்திரம் முப்பத்திரண்டு அக்ஷரங்களுள்ளது. அதுடன் சேர்ந்திருக்கிறது. வெளியில் மாயையால் சூழப்பட்டிருக்கின்றது. இந்த ஸுதர்சன சக்கரம் அரங்களால் ஸ்திதியுள்ளது. தேவர்கள் தான் அரங்கள்; இந்த சக்கரம் பத்திரங்களால் சேர்ந்திருக்கின்றது. பத்திரங்கள் சந்தஸ்கள்.
|