பக்கம் எண் :

818
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

நூல்களின் உரையாசிரியர்களும் அதன் பின் தமிழில் கட்டுக்கதைகள் எழுதுவோரும் மொழி பெயர்ப்பவரும் நாளடைவில் தமிழ் மொழிகளைப் பெயர்த்து அந்நிய மொழிகளைச் சேர்த்து தமிழ்மொழியோடு பிறமொழிகளைப் பிணைத்துத் தமிழ் நூல்களின் பெயர்களை அந்நிய மொழிகளில் மாற்றி அலங்கோலம் செய்து கொண்டிருக்கிறார்களென்பதையும் நாம் அறிவோம்.

அதுபோலவே தமிழ்மொழிகள் பலவற்றையும் தங்கள் தங்கள் பாஷைக்குரியவைகள் என்று சொல்லுகிறவர்களுமுண்டு. கட்டம், கடம்; தட்டம், தடம்; வட்டம், வடம்; கன்னம், கனம்; அத்தை, அதை; புத்து, புது; தாத்தா தாதா; தக்கை, தகை; முத்து முது முதலிய வார்த்தைகளைப்போல ஒற்றுக்களோடு சேர்ந்துவரும் வல்லெழுத்துக்களைத்தவிர உயிரோடும், உயிர் மெய்யோடும் கலந்துவரும் வல்லெழுத்துக்கள் தங்கள் வல்லின ஓசையை இழந்து மெல்லோசையாய் வருகின்றன. அதோடு ங, ஞ, ண, ந, ம, ன என்னும் மெல்லெழுத்துக்களுக்கு முன்பின்னுள்ள க, ச, ட, த, ப, ற என்ற வல்வெழுத்துக்கள் அதிக மெல்லோசையை அடைகிறதை இதன் முன் 392, 393-ம் பக்கங்களில் சொல்லியிருக்கிறோம். தமிழ் மொழிகளில் வழங்கிவரும் உச்சரிப்பை அறிந்துகொள்ளாமல் அத்தமிழ் மொழிகள் பலவும் சமஸ்கிருத பாஷைக்குரியவை யென்று அகராதி எழுதியவர்கள் புள்ளியும் போட்டு விட்டிருக்கிறார்கள்.

பூர்வ தமிழ் மக்கள் பழகிவந்த கலைகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனி நிகண்டுகள் சொல்லிவை்த்திருக்கிறார்கள். இயற்றமிழுக்குத் தனியே நிகண்டிருந்தாலும் வைத்தியம், சோதிடம், சங்கீதம், உடற்கூறு முதலிய சாஸ்திரங்களுக்குரிய நிகண்டுகளும் வெவ்வேறாய்ச் செய்திருக்கிறார்கள். இவைகளில் இயற்றமிழ் வார்த்தைகளுக்கும் இசைத் தமிழில் வழங்கிவந்த வார்த்தைகளுக்கும் நாடகத்தமிழில் வழங்கிவந்த வார்த்தைகளுக்கும் மற்றும் சில கலைகளில் வழங்கிவரும் வார்த்தைகளுக்குமுரிய நிகண்டுகளும் நூல்களும் கடல் கொண்ட நிமித்தம் இல்லாமற் போயின. இருந்தாலும் கடல் அழிவுக்கு உட்படாமல் தப்பிய தமிழ்மக்கள் சிலரின் ஞாபகத்திலிருந்த சூத்திரங்களும் தமிழ் மொழிகளும் மாத்திரம் வழங்கி வந்தன. அப்படி வழங்கிவந்த தமிழ் மொழிகளும் கடினமென்று வர வர பலரும் மறக்க அந்நியவார்த்தைகள் பெரும்பாலும் சேர்க்கப்பட்டுத் தற்காலம் வழங்கிவருகின்றன.

இதுபோலவே பூர்வம் 12,000 வருடங்களுக்கு முன்னமே தென்மதுரையில் வழங்கிவந்த இசைத்தமிழின் பல அரிய விஷயங்களையும் இராகங்களின் பெயர்களையும் அந்நிய பாஷைகளில் மாற்றித் தமிழ்நாட்டில் இருந்ததோ இல்லையோ இருந்ததேயில்லை் என்று சொல்லும் படியான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்களென்று இதன் முன் பார்த்தோம். சுரங்களின் கணக்கையும் சுருதிகளின் அலகு முறையையும் 12,000 ஆதி இசைகளையும் அறிந்து கொள்ள இயலாமல் ச-ம 9, ச-ப 13 என்ற வாதி சம்வாதி பொருத்தமும் ஒருஸ்தாயியில் 22, சுருதிகள் வழங்கி வருகின்றனவென்ற சுருதிமுறையும் இராகங்களின் பலபெயர்களும் சங்கீத ரத்னாகரரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுக் கர்நாடக சங்கீதத்தைக் கலக்க முறச்செய்த தென்றறாலும் பூர்வம் முதல் தமிழ்மக்கள் பாடிவந்த முதல் இராகமாகிய செம்பாலைப்பண் என்று அழைக்கப்படும் சங்கராபரணமும் படுமலைப்பண் என்ற கரகரப்பிரியாவும், செவ்வழிப்பண் என்ற தோடியும், அரும்பாலைப்பண் என்ற கலியாணியும், கோடிப்பாலைப்பண் என்ற அரிகாம்போதியும் விளரிப்பண் என்ற நடபைரவியும், தாரப்பண் என்ற பஞ்சமமில்லாத தோடியும் மற்றும் இராகங்களும் பூர்வமிருந்தது போலவே நாளதுவரையும் வழங்கி வருகின்றன.

அதோடு சோதிட சம்பந்தமான சில பொருத்தங்களும் மானுடத் தோற்றத்தின் தூல சூக்கும காரணதத்துவங்களின் சில பொருத்தங்களும் கர்நாடக சங்கீதத்தின் சுரம், சிறுசுரம், சுருதிகள், நுட்பமான சுருதிகள் என்ற கணக்கையுடையதாயிருக்கின்றனவென்று காண்கிறோம்.