Professor Owen என்பவரும் இதை ஆமோதித்து மிருகராசிகளுக்குள் பாடக்கூடியது இந்தக் குரங்கு ஒன்றே என்று சொல்லுகிறார். இந்த வாலில்லாக் குரங்கானது இவ்வித ஆரோகண அவரோகணத்தைப் பாடும் விஷயமானது எதைக் காண்பிக்கிற தென்றால், சக்தியானது மிருகராசிகளின் ஜாதி உயர அதுவும் படிப்படியாய் உயர்ந்து கொண்டேவருகிறதென்றும் சத்தியத்தை ரூபிக்கிறது. இப்படி ரூபிப்பதானது லேசாயும் சிலகாரியங்களுக்காகப் பிரயோசனமுள்ள தாயுமிருந்த போதிலும் இந்தப் புஸ்தகத்தை அடுத்த சங்கதி யல்ல என்றாலும் இதிலிருந்து நாம் படிப்ப தென்னவென்றால் மிருகராசி தாழ்ந்ததாயிருந்தால் ஸங்கீத ஸ்வரங்களை அறியும் ஞானம் குறைச்சலாயும், மிருகஜாதி உயர்ந்ததாயிருந்தால் அந்த ஞானம் அதிகமாயும் இருக்கிறது என்ற யாவராலும் ஒப்புக்கொள்ளப்படும் சத்தியமே. 74-வரு செக்ஷனில் நாம் சொன்னபடி அதிக உயர்ந்த மிருகராசிகளுக்குள் மனோதத்துவங்கள் எல்லாம் படிப்படியாய் அதிசீக்கிரத்தில் விருத்தியாகி விடுகிறது. இந்த விருத்தியானது மனிதஜாதியில் அதிசீக்கிரமாயும் மற்ற மிருகங்களுள் கொஞ்சம் காலதாமதமாயும் நடக்கிறது. இதினால்தான் சிறு குழந்தைகள் தாங்கள் கேட்கும் தொனிகளைத் திரும்ப அதேவிதமாய்ச் சொல்லிக் காண்பிப்பதோடு கூட ஒருதொனிக்கும் மற்ற தொனிக்குமுள்ள வித்தியாசத்தையும் கூட மனதில் லேசாய்ப் பதித்து வைக்கிறார்கள்." இதனால் லெமூரியா நாட்டிலிருந்த வாலில்லாக் குரங்குகளும் மனுடரும் ஆயப்பாலையில் வழங்கிவந்த பன்னிரு சுரங்களை அதாவது தற்காலத்தில் 72 மேளக்கர்த்தாவில் நாம் வழங்கிவரும் பன்னிரு சுரங்களையும் எவ்வித சந்தேகமுமின்றி மிகச் சுலபமாய்ப் பாடிக்கொண்டு வந்திருக்கிறார்களென்று தோன்றுகிறது. ஆய்ச்சியர் குரவையில் ஆயர்மக்கள் ச-ப முறை யாய் "குரன் மந்தமாக விளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா - வுரனிலா மந்தம் விளரி பிடிப்பா ளவணட்பின் பின்றையைப் பாட்டெடுப் பாள்." என்று கிரக சுரம்பிடித்து ஒருவர் மாற்றி ஒருவர் கானம் பண்ணினார்கள் என்றால் அக்காலத்தின் சங்கீதத்தின் உயர்வைச் சொல்லவும் வேண்டுமோ? அக்காலத்தின் சங்கீதம் வட்டப்பாலை முறையாலும் திரிகோணப்பாலை சதுரப்பாலை முறையாலும் மிகுந்த சிறப்புற்றிருந்ததென்று விளங்குகிறது. அதோடு சுருதிகள் இத்தனை யென்பதையும் அவைகளின் பொருத்தம் இப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவைகளில் விலக்கப்படவேண்டும் பகைச் சுரங்கள் இன்னவை என்பதையும் மிக நுட்பமாய்ச் சொல்லியிருக்கிறார்கள். பகைச்சுரங்கள் விலக்கப்படாமற் போனால் இராகங்கள் உயிரற்றனவாய் பிரயோசனமற்றுப் போகுமென்று தங்கள் அனுபவத்தினால் சாதித்து மிருக்கிறார்கள். அம் முறைபிசகாத பண்களினால் மதயானைகளை அடக்கினார்கள். நாகசர்ப்பங்களை வரவழைத்துப் படம் விரித்தாடும்படி செய்து பின் போகவிட்டார்கள். இன்னும் உருகாத கல் மனதையும் உருகச்செய்தார்கள். தேவதைகளைத்தோத்திரம் செய்து வேண்டுவன பெற்றார்கள். இப்படித் தாங்கள் நினைத்தவைகளைப் பெறுவதற்கு விவாதி சுரங்கள் என்று நாம் சொல்லும்பகைச் சுரத்தை நீக்கவேண்டுமென்று "கூடம் விரவாது குறைநிலத்தா னத்தியன்ற பாட லமுதம் பருகினான்" என்றும் "நின்ற நரம்பிற் காறும் மூன்றும் சென்று பெற நிற்பது கூடமாகு" மென்றும் இலக்கணமும் சொல்லி வழங்கிவந்திருக்கிறார்கள்.
|