பழைய தமிழ்நூல்கள் பிரசுரஞ்செய்யப்பட்டு யாவராலும் படிக்கப்பட்டதின் பலன் என்ன வென்றால், திராவிடர் ஆதிகாலமுதல் கல்வி நாகரீகம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என்னும் அப்பிராயமானது உறுதிசெய்யப்பட்டது. இந்தச் சிறந்த நூல்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரமானது மதுரைத் தமிழ்ச்சங்கம் இருந்த காலத்தைத் தீர்மானம்பண்ணுவதில் முக்கிய உதவியாயிருந்தது. ஜெயங்கொண்டானுடைய அரும்பத வுரையும், சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் திராவிட சங்கீத சாஸ்திரத்தையும் அதன் சிறப்பையும் ஸ்தாபிப்பதற்குப் பண்டிதரவர்கள் கையில் போதுமான ஆதாரங்களாய் அகப்பட்டன. சங்கீத சாஸ்திர நூல்கள் அநேகம் அழிந்து மறைந்துபோன காலத்தில்தான் இவ்வுரைகள் எழுதப்பட்டன. விஷயங்களை ஒழுங்குபடுத்தியிருக்கிற அழகையும் தன் அபிப்பிராயத்தை ஸ்தாபிப்பதற்கு அத்தியந்த பொறுமையுடன் நூலாசிரியர் செய்திருக்கிற ஆராய்ச்சியையும் கவனித்தால், தன் மீது தானே ஏற்றிக்கொண்ட மலைபோன்ற இந்த வேலையின் சிறப்பு மற்றவர்க்கு நன்குவிளங்கும். தற்காலம் அதிகமாய் வழக்கத்திலிராத பல நூல்களிலிருந்து நூலாசிரியர் எடுத்துச்செல்லும் மேற்கோள்களைக் கவனித்தால், ஆசிரியருடைய கல்வித்திறமையும் அவர்களோடு வேலை செய்தவர்களின் சாமர்த்தியமும் விளங்கும். யாவரும் அறிந்துகொள்ளக்கூடிய சுலபமான தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. சாமானியமான யாவரும் நூலாசிரியருடைய அபிப்பிராயத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம். சொற்ப சங்கீத ஞானம் உடையவர்களுங்கூட இந்நூலைப் படிப்பதினால் அதிக பிரயோசனத்தை படைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. (ஒப்பம்) திருமணம். செல்வக்கேசவராயன், | பச்சையப்பன் கல்லூரி. |
சென்னை, பிரசிடென்சி காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் மகா- - -ஸ்ரீ மகா மகோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவாகள் அபிப்பிராயம். தஞ்சாவூர் மகா- - -ஸ்ரீ ராவ்ஸாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரவர்கள் உலோகோபகாரமாக எழுதி வெளியிட்டுள்ள கருணாமிருதசாகரம் என்னும் அருமையான புஸ்தகத்திற் சிற்சில பாகங்களை உவப்புடன் படித்துப்பார்த்தேன். தென்மொழியிலும் வடமொழியிலும் உள்ள இசை நூல்களில் மிகுந்த ஆராய்ச்சியுடையவர்களே பார்த்து அபிப்பிராயஞ் சொல்லக்கூடிய புத்தகமாகும் இது. ஆயினும் பண்டிதரவர்களுடைய விருப்பத்தை மறுத்தற்கஞ்சி எனக்குத் தோன்றியவற்றைத் தெரிவிக்கலானேன். எத்தனையோ வருஷங்களாகப் பண்டிதரவர்கள் சங்கீதத்தில் உழைத்து வருதலைப் பலராற் கேட்டிருப்பதன்றி நான் நேரிலும் அறிந்திருக்கிறேன். இவர்களுடைய உழைப்பு வீணாகாமல் என்றும் நிலைபெற்றிருக்கும்படி இப்புஸ்தகம் வெளிவந்தது மிகவும் பாராட்டத்தக்கதே. ஆங்காங்குள்ள சங்கீத வித்துவான்களையும், பண்டிதர்களையும் வருவித்து மகாசபைகூட்டி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கலந்தும், பழைய தமிழ்நூல்களாகிய சிலப்பதிகாரம் முதலியவற்றைச் செவ்வனே ஆராய்ந்தும் தமிழ் மொழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைந்திருந்தனவும் இக்காலத்து நன்கு விளங்காதனவுமாகிய சங்கீத முறைகளையும் அவற்றின் பேதங்களையும் பின்னுமுள்ள நுட்பமான வற்றையும் யாவரும் எளிதில் அறிந்துகொள்ளும்படி விளக்கிப் பண்டிதரவர்கள் இந்நூலை வெளிப்படுத்தியதற்காகத் தமிழுலகம் இவர்கள்பால் நன்றிபாராட்டக் கடப்பாடுற்றிருக்கின்றது. “முயற்சி திருவினையாக்கும்” என்பதற்கு இவர்கள் செய்கையையே உதாரணமாகச் சொல்லலாம். இங்ஙனம் | (ஒப்பம்) வே. சாமிநாதையன். |
|