பக்கம் எண் :

829
ஒரு ஸ்தாயியில் வழங்கி வரும் ஏழு சுரங்களப்பற்றி.

பன்னிரண்டு சுரஸ்தானங்கள் ஏற்படுகின்றன என்றும் அதில் ஏழுசுரங்கள் தங்கள் கணிதமுறைப்படி வெவ்வேறு இராகங்களாகச் சஞ்சரிக்கின்றன வென்றும் நாம் அறியவேண்டும். இதுபோலவே தமிழ் எழுத்துக்களில் உயிரெழுத்துப் பன்னிரண்டாகவும் அதில் ஏழு நெட்டெழுத்தாகவும் பன்னிரண்டு மாதங்களாகவும் அதில் ஏழு கிழமைகளாகவும் யாழின் பண்ணிரன்டு மெட்டுக்களாகவும் அதில் எழு சுரங்களாகவும் ஜீவர்களின் கீழ் மேல் ஆறு ஆறான பன்னிரண்டு ஆதாரங்களாகவும் அதில் ஏழு வகைத்தோற்றங்களாகவும் பன்னிரண்டு சூரியர்களாகவும் அவர்க்கு எழு குதிரைகளாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு ஸ்தாயியின் பன்னிரண்டு சுரங்களுள் ச-ப என்றசுரங்கள் சிவசத்திபோலத் தலையான சுரங்களாயிருப்பதினால் இவைகளை இராகங்களில் எக்காலத்திலும் மாற்றாமல் நிலையான சுரமாய் வைத்திருக்கிறார்கள். இவைகள் இடபம் தனுசு என்ற இராசிகளில் தனித் தனி நிற்கின்றன. துத்தம், கைக்கிளை, உளை, விளரி, தாரம், அல்லது ரி, க, ம, த, நி, என்ற ஐந்து சுரங்களும் இரண்டு இரண்டு இராசிகளில் நின்று இரண்டு இரண்டு இடங்களைப் பெறுகிறன்றன. ஆகவே சட்சமம் 1, இடபம் 2, காந்தாரம் 2, மத்திமம் 2, பஞ்சமம் 1, தைவதம் 2, நிஷாதம் 2 ஆகப் பன்னிரண்டு இராசிகளில் நிற்கின்றன. இம்முறையில் 1, 2, 2, 1, 2, 2, 2, என்ற ஸ்தானங்களில் ஏழு சுரங்களுமிருக்கிறதாகப் பூர்வ தமிழ்மக்கள் வழங்கி வந்திருக்கிறார்கள். இவ்வேழு சுரங்களையும் இம்முறையாகவே இவைகளுக்குரிய கணக்கின்படியே கிரகமாற்றிக்கொண்டு வருகையில் தாய் இராகங்களாகிய ஏழு பெரும்பாலைப்பண்கள் பிறக்குமென்றும், இம்முறைப்படியே பன்னிரு சுரங்களில் கிரகமாற்றிக்கொண்டுவர பன்னிருபாலை பிறக்கு மென்றும் சொல்லியிருப்பதை 720, 721-ம் பக்கங்களில் காண்போம்.

இவைகளில் ஏழு பெரும்பாலை என்றும் ஐந்து சிறு பாலைஎன்றும் சொல்லுகிறார்கள். ஏழு பெருபாலைப்பண்களுள் செம்பாலைப்பண்ணை சங்கராபரண மென்றும் படுமலைப்பண்ணை கரகரப்பிரியா என்றும் செவ்வழிப்பண்ணை அனுமத்தோடி என்றும் அரும்பாலைப்பண்ணை மேசகல்யாணி என்றும் கோடிப்பாலைப்பண்ணை அரிகாம்போதி என்றும் விளரிப்பண்ணை நடபைரவி என்றும் மேற்செம்பாலைப்பண்ணை சுத்த தோடி என்றும் தற்காலத்தில் அந்நியபெயருடன் வழங்குகிறோம். இவ்விராகங்கள் அடியில் வரும் அட்டவணையில் 1, 2, 2, 1, 2, 2, 2, என்ற முறைப்படி வருகின்றன என்பதைக் காண்க.

அடுத்த அட்டவணையில் முதல் வரிசையில் ஏழு இலக்கங்கள் ஏழு சுரங்களுக்கும் வருகின்றன. இவைகளில்முதலாய் நின்ற சட்சமத்திற்குரிய இலக்கம் போக இடபத்திற்குரிய 2ஐ அடுத்த வரிசைக்கு ஆரம்பமாகவும் காந்தாரத்திற்குரிய 2ஐ மூன்றாம் வரிசைக்கு ஆரம்பமாகவும் முறையே வைத்துக்கொண்டு இடமுறையே போவோமானால் ஏழுவரிசைக்குரிய இலக்கங்களையும் அட்டவணையில்காண்போம். இதில் ஏழாவது வரிசையை நாம் கவனிப் போமானால் ஐந்தாவது ஸ்தானத்தில் வரவேண்டிய பஞ்சமத்திற்குப் பதில் 4 அலகு மத்திமம் வருகிறது. பஞ்சமம் நிலையான சுரமாய் இருப்பதினாலும் 2 அலகு மத்திமமும் 4 அலகு மத்திமமும் ஒரு இராகத்தில் வரக்கூடாததாய் இருப்பதினாலும் அப்படிவருமானால் முன் குறித்த மார்க்கவிதிக்கு மாறுபடுமானதினாலும் 4 அலகு மத்திமஸ்தானத்தில் வரும் பஞ்சமத்தை நீக்கி சுத்ததோடி என்றுசொல்லநேரிட்டது. இதனால தாரப்பண்திறமென்று சொல்லநேரிட்டதென்று தோன்றுகிறது. அதையே சுத்த தோடியென்று நாம் வழங்குகிறோம். ஏழாம் வரிசையை நீக்கித் தாய் இராகங்கள் ஆறென்றே எடுத்துக்கொண்டு ஏழாவதை மேற் செம்பாலைப்பண் எனச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் முன்னோர் சொல்லிய சுரக்கணக்கின் விதி தவறி தேசிக இராகங்கள் உண்டாவதற்கு இது ஒரு வித்தாயிருக்கிறது. அடியில் வரும் பெருபாலை ஏழும் குறிக்கப்பட்ட சக்கரத்தில் இவ்வலகுகளின் கணிதத்தைத் தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.