யாழ் ஓசையாலும் கணக்கிடப் படக்கூடியதாயிருக்கிறதென்றும் நாலாவது பாகத்தில் 802ம் பக்க முதல் 809ம் பக்கம் வரையும் சொல்லியிருக்கிறேன். அம் முறைப்படி ஆதாரசட்சம் ஒன்றானால் அதன் ஓசையின் அலைகள் 540 ஆயிருக்கவேண்டு மென்றும் அதன்படி மத்தியஸ்தாயியின் சட்சம் அதின் இருமடங்காய் 1080 ஓசையின் அலைகளையுடைய தாயிருக்கவேண்டு மென்றும் 540 ஓசையின் அலைகளிலிருந்து 1080 ஆக மத்தியஸ்தாயியில் முடிந்த சட்சத்திற்கு 12 இடங்களில் படிப்படியாய் உயர்ந்து எப்படி வருகிற தென்றும் அட்டவணையின் ஆறாவது கலத்தில் காண்கிறோம். அட்டவணையின் ஐந்தாவது கலத்தில் 0 வரிக்கு நேராய் 0-ன் துருவம் 1.000000. இதை 540 ஆல் பெருக்க 540 கிடைக்கிறது. இதே ஆதார சட்சத்தின் ஓசையின் அலையாம். முதலாவது வரிக்கு ஐந்தாவது கலத்தில் மூல எண்ணளுக்குக்கிடைக்கும் 1.059463 எண்ணை 540 ஆல் பெருக்க 572.11 என்றும், இரண்டாம் வரிக்கு எதிரில் ஐந்தாவது கலத்தில் மூலதுருவத்திற்கு வரும் எண்ணாகிய 1.122462ஐ 540-ஆல் பெருக்க 606.13 என்றும் வரும். இப்படியே ஒன்றுமுதல் பன்னிரண்டு வரிகளிலும் ஐந்தாம் கலத்தில் வரும் எண்களை 540 ஆல் பெருக்க பன்னிரண்டு ஸ்தானங்களில் வரும் சுரங்களுக்கும் ஓசையின் அலைகள் வருகின்றன. இவற்றை அட்டவணையின் ஆறாவது கலத்தில் காண்போம். இதன்முன் சுருதிகளைப்பற்றிச் சொல்லும் சிலர் ஆதாரசட்சம் 240 ஓசையின் அலைகளையுடையதென்று கணக்குச் சொல்லியிருப்பதினிமித்தம் அக்கணக்கின்படி பன்னிரு சுரங்களுக்கும் கிடைக்கக்கூடிய ஓசையின் அலைகள் இன்னவையென்று ஏழாம் கலத்தில் சொல்லியிருக்கிறோம். இதன்மேல் ஒருமுழுத்தந்தியில் அதாவது 32 அங்குலத்தந்தியில் இன்னின்ன பாகத்தில் சுரங்கள் அமைகின்றனவென்று பார்க்கவேண்டும். 32-அங்குலமுள்ள ஒரு தந்தியின் பாதியாகிய மத்திய ஸ்தாயி முடிந்த சட்சத்தில் பன்னிரு சுரங்களும் நிற்கும் கணக்கு. அட்டவணையின் எட்டாவது கலத்தின் தலைப்பில் காணப்படும் ஒன்று தந்தியின் நீளம்மாம். இந்நீளத்தின் பாதியில் மத்திய ஸ்தாயியின் முடிந்த சட்சமம் நிற்கிறது. அதன் மேல் தந்தியின் நீளத்தில் பாதியில் பாதியாகிய நாலில் ஒன்றில் தார ஸ்தாயி முடிந்த சட்சம் வருகிறது. இதில் அட்டவணையில் ஐந்தாவது கலத்தில் காணப்படும் ஒன்று, நாலாவது கலத்தின் முதுலில் காணப்படும் 0 ஆகிய மூலத்திற்கு வரும் எண்ணாகிறது. ஐந்தாவது எட்டாவது கலங்களில் காணப்படும் எண்களை ஒன்றோடொன்று பெருக்கக் கிடைப்பது ஒன்று. இதுபோல் ஒன்று முதல் 12 இடங்களில் வரும் சுரங்களுக்கு எதிரில் காணப்படும் ஐந்தாம் கலத்தின் எண்களால் ஒன்றை வகுக்க எட்டாம் கலத்தில் ஒன்று முதல் பன்னிரண்டு சுர ஸ்தானங்களின் அளவுகள் கிடைக்கின்றன. முடிந்த பன்னிரண்டாமிடமாகிய மத்திய ஸ்தாயி சட்சத்திற்கு வரும் .5 ஒன்றான ஆதார சட்சத்தின் பாதியாய் நிற்கிறதைக் காண்போம். எட்டாம் கலத்தில் 12 சுரங்களுக்கும் வரும் ஸ்தானங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இனிமேல் இவ்வளவுடன் 32 அங்குலமுள்ள ஒரு தந்தியில் எத்தனை யாவது அங்குலத்தில் வருகிறதென்று பார்க்கவேண்டும்.
|