பக்கம் எண் :

844
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

முறைப்படியும் ச-ப, ச-ம முறைப்படி ஒருஸ்தாயியில் 12 சுரங்கள் வரும் என்று பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த ஆயப்பாலை முறைப்படியும் பன்னிரு சுரங்கள் வருமென்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. யாவரும் தெளிவாய் அறிந்து கொள்ளக் கூடிய இம்முறை பன்னிரண்டாவது கலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்வட்டவணையில் காணப்படும் பன்னிரு உட்பிரிவுகளில் அல்லது கலத்தில் ஒரு ஸ்தாயியில் உண்டாகும் பன்னிரண்டு சுரங்களுக்குரிய கணக்கையும் ஓசையின் அலைகளையும் தந்தியின் நீளத்தையும் சென்ட்ஸ்களையும் தெளிவாகக் காட்டியிருக்கிறோம்.

இம்முறையே நாதத்தின் வேறுபாடுகளை நுட்பமாய்க் காணக்கூடிய முறையென்று நினைக்கிறேன். இம்முறை போகாத எம்முறையும் சரியான முறையல்ல என்று எண்ணுகிறேன். இதுவே இயற்கை அமைப்பின் கணக்காம்.

ச-ப (2/3), ச-ம3/4 என்று போகும் அளவுகணக்கு அத்தனை நுட்பமில்லாத ஒரு மோட்டா அளவென்று இதன்முன் சொல்லியிருக்கிறோம். ச-ப, ச-ம வின் ஓசை, ஒருவாறு (2/3),(3/4) க்கு ஒத்திருந்தாலும் அந்த முறைப்படி அளந்து செல்லும் பொழுது மற்ற சுரங்கள்(1/2), (1/3), (1/4), (1/5),(1/6)என்ற முறையில் கிடைக்கா.

மேலும் ச-ப (2/3) ஆக வைத்து அளந்துகொண்டுபோகும்பொழுது ஒரு ஸ்தாயியில் பூரணமாய் முடியாமல் 24 சென்ட்ஸ்கள் ஸ்தாயிக்கு மேற்போகிற தென்றும் (3/4) என்று போனால் ஒரு ஸ்தாயி முடியாமல் 24 சென்ட்ஸ்கள் குறைகிறதென்றும் அட்டவணையில் பார்த்திருக்கிறோம். ஆகையினால் (2/3),(3/4) என்று செல்லும் முறை சுருதி ஞானத்தைக் கொண்டு கணக்குச் சொல்லும் பூர்வ இசைத்தமிழ் முறைக்குப் பொருந்தாதென்று நிச்சயமாய்ச் சொல்லுவோம். பூர்வ இசைத் தமிழ் முறையே அறிவதற்கு Geometrical Progression என்ற கணித முறையே கூடியவரை நுட்பமாகச் சொல்லக்கூடியது என்று எண்ணுகிறேன்.

மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்ற நால்வகை யாழைச் சொல்லும் தொல்காப்பியரின் கருத்திற்கும், யாழ் ஒவ்வொன்றுள்ளும் கிரகம் மாறிவரும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நால்வகை ஜாதிகளைச் சொல்லும் இளங்கோவடிகள் கருத்திற்கும், கிரகம் மாற்றும் சங்கீத ரத்னாகரர் முறைக்கும் ஒத்ததான சுர அளவுகளை, இம்முறைக் கணக்கே தரக்கூடுமேயொழிய, வேறு விதத்தில் சொல்லுவது நுட்பமாயிருக்க மாட்டாதென்று எண்ணுகிறேன்.

மனிதனுடைய நாவில் உண்டாகும் இன்பமான ஓசையைக் கேட்டு எழுதிக்கொண்டு திரும்ப அதை நமக்குச் சொல்லிக்காட்டும் கிராமபோன் என்னும் இயந்திரத்தை நாம் பார்த்திருப்போம். அவ்வியந்திரத்தினால் சொல்லப்படும் ஓசைகள் முற்றிலும் மனிதனுடைய குரலைப்போலில்லாமல் கொஞ்சங்குறைய ஒத்திருப்பதை நாம் காண்போம். எதனால் என்று விசாரிக்கும்பொழுது நம் வார்த்தையைக் கிரகிக்கும் ரிக்கார்டர் (recorder) என்ற கேட்கும் இயந்திரம் அப்பிரேகத்தகட்டினாலும் (mica) துத்தநாகத்தில் செய்த மெல்லிய தகட்டினாலும் செய்யப்பட்டிருக்கிறதென்று அறிவோம்.