சுருதிகளின் கணக்கு கண்டுபிடிக்கும் விஷயத்தில் தமிழ்நாட்டில் பூர்வத்தில் வழங்கி வந்தபடியே ஒரு உத்தமமான முறையைச் சொன்னாலும் ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டு சுருதிகளிருக்கின்றனவென்று சாரங்கர் சொன்னதினால் இவ்வளவு சந்தேகங்கள் வந்தன. இந்த இருபத்திரண்டையும் பூர்வம் இசைத் தமிழ் விதிப்படி கலைமலைவாக எண்ணி சாரங்கள் சொல்லியிருப்பாரானால் அதை சிரமேற் கொள்வோம். ஆனால் ச-ப 12 சுருதிகளையும் ச-ம 8 சுருதிகளையும் நடுவிலுடையதாயிருக்க வேண்டு மென்று சொல்லாமலிருந்தால் மிகநன்மையாயிருக்கும். தொட்ட சுருதியையும் விட்ட சுருதியையும் சேர்த்து ச-ப பதினாலும் ச-ம பத்தும் ஆகிறது. இதில் இணை இணையான பதினாலு சுருதிக்கும் கிளை கிளையான பத்து சுருதிக்கும் இது சரியாயிருக்கிறதென்றும் தமிழ் முறை இதுதானென்றும் நாம் சற்று சந்தேகிக்க நேரிடும். சற்று கவனிப்போமானால் தொட்ட சுருதியை நீக்கி ச-ப பதினாலாவதாகவும் ச-ம பத்தாவதாகவும் வருகிறது. துவங்கிய சுருதியைச் சேர்க்கும் பொழுது ச-ப பதினைந்தாவதாகவும் ச-ம பதினோராவதாகவும் வரவேண்டும். ஆரம்பித்த சுருதியை நீக்கி ச-ப பதின்மூன்றாகவும் ச-ம ஒன்பதாகவும் ஆக சுருதிகள் இருபத்திரண்டென்று சாரங்கதேவர் சொல்லுகிறார். ஆனால் பூர்வ இசைத் தமிழிலோ இணை இணையான ஏழு இராசிகளும்கிளை கிளையான ஐந்து இராசிகளும் ஆகப்பன்னிரண்டு இராசிகளென்றும், அவற்றில் பன்னிரண்டு சுரங்கள் வருகின்றனவென்றும், அவைகள் ச-ப பதினாலும் ச-ம பத்து அலகுகளுமுடையதாய் ஒரு ஸ்தாயி இருபத்து நான்கு அலகுகள் அல்லது சுருதிகளுடையதாயிருக்க வேண்டு மென்றும் சொல்லலாம். சூரிய சந்திரர்கள் தங்கள் நிலை மாறினாலும் இராசி வட்டத்தில் சகல பொருத்தங்களோடும் அளவோடும் அமைத்துச் சொல்லிய ஏழு சுரங்களும் பன்னிரண்டு அரைச்சுரங்களும் இருபத்து நான்கு சுருதிகள் அல்லது கால் சுரங்களும் ஒரு நாளும் மாறாதிருக்கும்படி விதி சொல்லி வைத்த இசைத்தமிழின் அருமை தெரியாமல் பலர் பலவாறாகச் சொல்ல நேரிட்டதேயென்று வருத்தப்பட வேண்டிய தாயிருக்கிறது. மற்றும் சுருதி சேர்க்கும் முறையில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகளை இரண்டாம் பாகத்தின் கடைசியில் 471 முதுல் 488-ம் பக்கம் வரை சங்கீத ரத்னாகரரின் சுருதி முறையில் சொல்லியிருக்கிறோம்.
|