பக்கம் எண் :

857
தென்னிந்திய சங்கீதம் அல்லது கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளுக்குக் கணித முறை.

5. தென்னிந்திய சங்கீதம் அல்லது கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளுக்குக் கணித முறை.

பூர்வம் தென்மதுரையிலுள்ளோர் இசைத் தமிழ் என்று சொல்லும் தென்னிந்திய சங்கீதத்தின் முறைப்படி, வட்டப்பாலையில் இணை, கிளையாய்ச் சுரங்கள்பொருந்தும் முறையில்,

(1) பன்னிரு சுரங்கள் உண்டாகின்றனவென்றும்,

(2) அவற்றில் 1, 2, 2, 1, 2, 2, 2, என்ற இராசி முறைப்படி ஏழு இசைகளும் (சுரங்களும், உண்டாகின்றனவென்றும்,

(3) இவைகள் கிரகசுரம் மாறும் காலத்தில், பன்னிரண்டு இராசிக்குரிய சுரங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் மாறி வருவதால் தாய் இராகங்கள் ஆறும் பிறக்கின்றனவென்றும்,

(4) அவைகளுள் விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைத்து, அதாவது ஒரு இராசி வட்டத்தின் இருபத்துநான்கு அலகுகளில் இரண்டு அலகுகுறைத்து, இருபத்திரண்டு அலகுகளில் கானம் செய்து வந்தார்களென்றும்,

(5) அவர்கள் வழங்கிவந்த ஏழு இசைகளையே தற்காலம் கர்நாடக சங்கீதத்தில் நாம் பாடிக்கொண்டிருக்கிறோமென்றும்,

(6) ஆயப்பாலையில் வரும் பன்னிரு சுரங்களே நம் அனுபோகத்திலிருக்கின்றனவென்றும்,

(7) வட்டப்பாலையில் வழங்கிவந்த இருபத்துநான்கு அலகுகளில் இருபத்திரண்டு அலகுகளே தற்காலத்தில் சந்தேகத்திலிருக்கின்றனவென்றும் சொல்லி,

(8) அவைகளில் இனி ஒருக்காலும் சந்தேகம் உண்டாகாதிருக்கும் படி கணித முறையும் காட்டியிருக்கிறேன்.

தென்னிந்திய சங்கீதத்தின் பூர்வத்தையும் அதன் நுட்பத்தையும் அறிய விரும்பும் விவேகிகளுக்கு இவை போதுமென்று நினைக்கிறேன். அதோடு இசைத் தமிழ் நூல்களில் இவ்வளவு அரிய விஷயங்கள் பல ஆயிர வருடங்களுக்குமுன்பே சொல்லப்பட்டிருக்கின்றனவென்றும் அவை தற்காலத் தேர்ச்சிக்கும் மேலானவைகளாயிருக்கின்றனவென்றும் ஆச்சரியப் படுவோம். என்றாலும் இத்துடன் நம் விசாரணையை நிறுத்தி விடாமல் விசாரிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. நாம் பாடிவரும் இனிய இராகங்கள், ஏழு சுரங்களுக்குள்ளும் பன்னிரண்டு அரைச் சுரங்களுக்குள்ளும் 24 சுருதிகளுக்குள்ளும் அடங்கவில்லை. அதை நாம் தெரிந்துகொள்ளாதவரையும் இன்னும் பலவிதமான சந்தேகம் வந்துகொண்டே யிருக்கும்.

பூர்வம் தமிழ் நாட்டில் இசைத்தமிழ் நூல்களில் வழங்கிவந்த பன்னீராயிரம் ஆதி இசைகளும், திருஞானம் அதாவது தேவாரம் திருவாசகம் முதலிய பண்களும் பூர்வ முறைப்படி சொல்லப்படுவதை நாம் கவனிப்போமானால், இருபத்துநான்கு சுருதிகளுக்கு மேற்பட்ட நுட்பமான சுருதிகள் வருகிறதாகக் காண்போம். பூர்வ முறையாய் பாடப்படும் பண்களையும் இராகங்களையும் பெயர் மாற்றித் தற்கால நாகரீகத்திற்கேற்ற விதமாய் பார்சீ, இந்துஸ்தானி, நோட்டு முதலியவைகளில் பாடிக்கேட்கும் வழக்கமுமுண்டாகிவிட்டது. தேவாரப் பண்கள் ஓதும் பூர்வ முறையையும் அவற்றின் அழகையும், பொருளை மனதிற்கு உணர்த்தும் வன்மையையும் தற்காலத்தில்