பக்கம் எண் :

858
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

அங்கங்கே சிறு பான்மையாய்க் காண்கிறோம். அவற்றிற்கு அடுத்த படியில் க்ஷேத்திரிய பதங்களைச் சொல்லலாம். அவைகளும் மிகச்சொற்பமாகி விட்டனவென்று நாம் அனுபோகத்தில் காண்கிறோம்.

பூர்வமான இராகங்கள் மிகவும் அழகுள்ளவைகளாய்க் காணப்படுவதற்கு அவர்கள் அவைகளில் வழங்கிவந்த நுட்பமான சுருதிகளே காரணம். இந்த நுட்பமான சுருதிகள் இன்னவையென்று நிச்சயிக்க முடியாமல் விட்டு விட்டதினிமித்தம் முக்கியமான ஏழு சுரங்களிலுங்கூட சந்தேகிக்கும்படி நேர்ந்தது. இந்த நுட்பமான சுருதிகளில் ஒன்று, ஏழு சுரங்களில் ஒன்றோடு சேரும்பொழுது அவைகள் மற்றவர்கள் சுரங்களோடு ஒத்துவராமல் கொஞ்சம் கூடியும் குறைந்தும் வருகின்றனவென்று கண்டவர் 'மற்றவர் வழங்கி வரும் சுரங்களுக்கும் எங்கள் சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களுக்கும் மிகுந்த வித்தியாசமுண்டு. உங்கள் சுரம் சரியாயில்லை' என்று வாதிக்கவும் அதற்கேற்ற விதமாய்ப் பல கணக்குகள் காட்டவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படிக் கணக்குகள் காட்டினாலும் அவைகளினாலும் ஒருமுடிவுக்கு வராமல் பல ஆக்ஷேபனைகள் தோன்றும்படியாகவே முடிந்தது.

நுட்பமான சுருதிகள் இன்னவையென்று நாம் அறிந்து கொள்ளாதவரைக்கும் பூர்வ இசைத் தமிழின் நுட்பத்தை நிதானிக்கவும் முடியாது. பூர்வ முறைப்படி தற்காலம் வரையும் வழங்கிவரும் இராகங்களின் நுட்பத்தை அறிந்துகொள்ளவும் முடியாது. தற்காலத்தில் வழங்கிவரும் இராகங்களுக்குச் சுரம் சுருதிகள் இன்னவையென்று எழுதிக்காட்டவும் முடியாது. இதனால் சங்கீத சாஸ்திரத்தின் நுட்பம் வர வரக்குறைந்து பன்னிரு சுரங்களோடு நின்றுவிடும். அதோடு நிற்காமல் நுட்பமான சுருதிகள் கலந்துவரும் கர்நாடக சங்கீதத்தைச் சுரம் தெரியாமல் பாடுகிறார்களென்று சொல்லவும் நேரிடும். கர்நாடக இராகங்கள் தங்கள் பூர்வமான பெயரை இழந்து அந்நியபாஷையின் பெயர்களால் அழைக்கப்படுவதுபோல நுட்பமான சுருதிகளையும் இழந்து மொத்தமாகிப் பன்னிரண்டு சுரத்தோடு நின்றுவிடும். ஆகையினால் நுட்பமான சுருதிகள் இன்னவை யென்றும் நாம் வெகு நுட்பமாய்க் கவனிக்கவேண்டும்.

இதன் முன் உடற்கூறு நூல்களில் வேதாந்த நூல்களிலும் சோதிட நூல்களிலும் சங்கீத நூல்களிலும் சர நூல்களிலும் வரும் கணக்குகள் ஒன்றற்கொன்று சம்பந்தமுடையதாயிருக்கிறதென்று 771-ம் பக்கம் முதல் 810-ம் பக்கம் வரையும் பார்த்திருக்கிறோம். அம்முறைப்படியே நுட்பமான சுருதிகளும் வரவேண்டும்.

எப்படி தூலதேகத்தின் அளவு 96 அங்குலமாயிற்றோ அப்படியே தூல சூக்கும காரண சரீரங்களையுடைய ஒருவன் கருவி கரணாதியாகிய 96 தத்துவங்களை உடையனா யிருக்கிறானென்று நம்முன்னோர்கள் சொல்லியிருக்கும் கணித முறைப்படியே ஒரு ஸ்தாயியில் வழங்கும் நுட்பமான சுருதிகள் 96 ஆக இருக்கலாமென்று நாம் நினைக்க வேண்டியதா யிருக்கிறது.

ஒரு ஸ்தாயியில் 96 சுருதிகள் வருகின்றனவென்று நாம் நிச்சயித்துக் கொள்வோமானால் சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப் பற்றிய சந்தேகங்கள் யாவும்தீர்ந்துவிடும். ரி, க, ம, த, நி என்ற ஐந்து சுரங்களும் இரண்டு இரண்டாய்ப் பிரிக்கப்பட்டு ச-ப சேர்ந்து அரை அரையான பன்னிரண்டு சுரங்களாகி அதன்பின் வட்டப்பாலை முறைப்படி அவை ஒவ்வொன்றும் இரண்டு இரண்டாய்ப் பிரிந்து எப்படி சுருதிகள் 24 ஆயிற்றோ அப்படியே ஒவ்வொரு சுருதியையும் இரண்டு இரண்டாய்ப் பிரித்து 48 ஆகச் சொல்லக்கூடாதோ என்று நினைப்போம். ஆனால் அவைகளினாலும் நாம் படித்து வரும் இராகங்களில் வழங்கும் நுட்பசுருதிகளைக் குறித்துக்கொள்வது கூடாத காரியமென்று மிகத்தெளிவாகத் தெரிகிறது.