பூர்வம் பல்லாயிர வருடங்களாகப் பாடப்பட்டு வரும் தமிழ் இராகங்களின் உண்மையை உள்ளபடி அறிந்து கொள்வதற்கும் பிறருக்கு அறிவிப்பதற்கும் சுருதிகள் 96 இருக்கவேண்டுமென்று நிச்சயமாய்ச் சொல்வோம். நுட்பமான சுருதிகள் 96 என்று நான் சொல்லுகையில் சிலருக்கு மிகுந்த சந்தேகம் உண்டாகலாம். அல்லது இது பூர்வ இராகங்களில் வரவில்லை என்று தோன்றலாம். ஒவ்வொரு நுட்பமான சுருதியும் நம் கானத்தில் வழங்கி வருகிறதா என்று கேட்கலாம். ஆனால் 96 சுருதிகளில் ஒன்று அல்லது இரண்டு சுருதிகள் பிரதானமான ஏழு சுரத்தோடு சேர்ந்து வருமேயொழிய எல்லாம் ஒரு இராகத்தில் வரமாட்டாது. ஒரு ஸ்தாயியில் ஏழு சுரங்களோடு சேர்ந்து வருமேயொழிய நுட்பமான சுரங்கள் தனியாய் வரா. ஆகையினால் மலைக்க ஏதுவில்லை. நம் வழக்கத்தில் ஒவ்வொரு இராகத்திலும் இப்படிப் பாடிக்கொண்டிருந்தாலும் அது இன்னதென்று அறியாமலிருக்கிறோமே யொழிய வேறில்லை. அதோடு ஒருஸ்தாயியை 96 ஆகப்பிரித்து 96 மெட்டுகள் போடவேண்டுமென்பதுமில்லை. ஆனால் இதன்முன் நாம் கொடுத்திருக்கிற ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களுக்கும் நடுவில் இரண்டு சுருதிகளாகப் பிரித்து 24 சுருதிகளாக்கி அதில்ஒவ்வொரு சுருதியையும் நாலு பாகமாக்கி அதில் மெட்டு வைத்துப் பார்ப்போமானால் நுட்பமான சுருதிகள் 96 ஆகும், வட்டப்பாலை முறைப்படி நின்ற நரம்பிற்கு 2, 3, 5, 7, 9, 11, (12 அதாவது நின்ற நரம்பு) என்ற பொருத்தமான ஏழு சுரங்கள் மாத்திரம் வரும். அதில் விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கானம் பண்ணும் முறைப்படியே அதாவது நின்ற நரம்பிற்கு நாலும் ஒன்பதுமான சுரங்களிலும் மற்றும் கிளை கிளையாய் வரும் சுரங்களிலும் இணை இணையாய் வரும் சுரங்களிலும் இந்நுட்பமான சுருதிகள் சேர்ந்து வருமேயொழிய எல்லாச் சுரங்களிலும் சேர்ந்துவரமாட்டா. ஆகையினால் நாம்தெளிவாய்த் தெரிந்துகொள்ளக் கூடியதேயொழிய கூடாததொன்றுமில்லை. யாழில் மத்திய ஸ்தாயியில் முன்முறைப்படி அமைக்கப்பட்டபன்னிரு மெட்டுகளுக்கும் நடுவில் மெழுகை ஒரே மட்டம் செய்துகொண்டு, மெழுகிற்கும் தந்திக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியின் உயரத்துக்குத் தகுந்த அளவில், யானைத் தந்தத்தினாலாவது மூங்கில் குச்சிகளினாலாவது ஒரு பக்கம் (1/16) அதாவது வீசம் அங்குல கனம் மட்டமாகவும் மற்றொரு பக்கம் யாழின் மெட்டுபோல் கூறூகவுமிருக்கும்படி 2(1/2) அங்குல நீளத்தில் செய்து ஒவ்வொரு இடைவெளியில் வரும் நுட்பமான சுருதி ஸ்தானங்களுக்கு வைத்துப் பார்ப்போமானால் நாம் நுட்பமாய்த் தெரிந்து கொள்வோம். திஷ்டாந்தரமாக சுத்த ரிஷபம் என்று நாம் சொல்லும் இரண்டு அலகுள்ள ரிஷபத்தை இரண்டு சரிபங்கு செய்து ஒரு அங்குள்ள ரிஷபத்தைக் குறிக்கலாம். அதன் மேல் ஒரு அலகுள்ள ரிஷபத்திற்கு நுட்பமான சுருதிகள் (1/4),(1/2),(3/4) என்று பங்கு வைவத்துக்கொள்ளவேண்டும். இதுபோலவே ஒரு ஸ்தாயியில் வரும் 24 சுருதிகளும் ஒவ்வொன்றும் (1/4),(1/2),(3/4) என்று வேறு மூன்று ஸ்தானங்களை யுடையதாயிருக்கும். ஆக சுருதிகள் இருபத்து நான்கும் ஒவ்வொரு சுருதிக்கும் வரும் (1/4),(1/2),(3/4) என்ற மூன்று ஸ்தானங்களில் வரும் கூடுதல் 72-ஆக மொத்தம் 96 ஆகும். இதை சுலபமாகச்செய்து நாம் பாடிக்கொண்டிருக்கும் இராகங்களில் வரும் சுருதிகளைத் திட்டமாய்ச் சந்தேக மறக் குறித்துக் கொள்ளலாம். நினைத்த சமயத்தில் கூட்டியும் குறைத்தும் சொல்லிப்பழக்க முள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய உபத்திரவமாயிருக்கும். சுருதிகளை நிச்சயித்துக் கொள்ளாமலிருப்பதினால் பல சந்தேகங்களும் பல வாதங்களும் வளர்ந்து கொண்டே யிருக்குமேயொழிய ஒரு நாளும் முடிவடைய மாட்டாது.
|