பக்கம் எண் :

106வளவன் பரிசு

  சாயும் கொடுமையை இந்தக் கண் காண்பதினும் வேதனை நிறைந்தது
  வேறெதுவுமில்லை.

கமலை : கண்ணன் மண்டபம் இடியப் போகிறதா? என்ன உளறுகிறாய்?

அன்னம் : உளறவில்லை. உண்மையை உரைக்கிறேன். கோயிலுக்குள்ளே
  இருக்கும் உங்களுக்கு வெளியே நடக்கும் விபரீதங்கள் தெரியவில்லை.
  சகோதரிகளே, சுந்தரபாண்டியன் உறையூரில் உள்ள கோயில்களைத் தவிர,
  பிற கட்டடங்கள் அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டுள்ளான். அதன்படி

  ஊரே அழிந்துவிட்டது. அரண்மனை மாளிகைகள் அழிந்தன. கண்ணன்
  மண்டபம் இன்னும் அழியவில்லை. ஆனால் நாளை அதைப் பகைவீரர்கள்
  பாழாக்கப் போகிறார்கள். சகோதரிகளே, அந்தப் புகழ் மண்டபத்தை
  உயிர் கொடுத்தேனும் காப்பேன் என்ற உறுதியோடு வந்துள்ளேன்.
  எனக்கு உங்கள் துணை கிடைக்குமா? ஊரின் புகழுக்கு ஆதாரமாய்
  நிற்கும் பரிசில் மண்டபத்தைக் காக்கும் பணியில் உயிரையும் இழக்கும்

  துணிவோடு என்னுடன் வரமுடியுமா?


பொன்னி : வாள் வீரர்கள் கட்டடத்தை இடிக்கப் போகிறார்கள்.
  வளையணிந்த நாம் அதைத் தடுக்க முடியுமா?

அன்னம் : சகோதரி, பிறங்கு நிலை மாடத்து உறந்தைக்குக் கோழியூர்
  என்ற பெயருண்டு. இந்த மண்ணிலே பிறந்த கோழி, மதயானையோடு
  போரிட்டு விரட்டி வெற்றி பெற்றதால் இந்த உறையூர் கோழியூராயிற்று
  சகோதரி, இது வீரம் செறிந்த மண்! அஞ்சாமை நிறைந்த மண்! இந்த
  மண்ணிலே பிறந்த கோழிக் கிருந்த துணிவு, கோதையர்க் கில்லையா?