பக்கம் எண் :

காட்சி - 16107

பூங்கொடி : ஏனில்லை! கோழியைவிடவா நாம் குறைந்து போய்விட்டோம்?
  மண்டபம் காக்கும் மாபெரும் பணியில் என்னுயிரையும் இழக்க நான்
  தயார்!

பொன்னி : குழையெறிந்து கோழி யோட்டிய கோதையின் வளமையைப்
  பாடும் பட்டினப்பாலையை மறக்க முடியுமா? அதற்கு நம் சோழன்
  அளித்த பரிசை அழிக்கப் பாண்டியனுக்கு என்ன துணிவு! நானும்
  வருகிறேன்! என்னுயிரையும் தருகிறேன்!

கமலை : நானும் வருகிறேன்! என்னுயிரையும் தருகிறேன்.
 
பலர் : நானும் வருகிறேன்! என்னுயிரையும் தருகிறேன்!

அன்னம் : பொங்கியெழும் மங்கையர்களே! உங்கள் வீரத்தின் துணையால்
  பரிசில் மண்டபத்தின் வீழ்ச்சியைத் தடுக்கலாம்! வாருங்கள் என்னோடு!
 
  [பெண்கள் வரிசை வரிசையாக வருகிறார்கள். அவர்க்கிடையே நிறைமாதக்
  கர்ப்பிணியான காவேரியைக் கண்ட அன்னம் அவளைத் தடுத்து
  நிறுத்துகிறாள்]

அன்னம் : சகோதரி, சகோதரி....

காவேரி : (நின்று) என்னம்மா?

அன்னம் : நீயுமா என்னுடன் வருகிறாய்?

காவேரி : ஏன், வரக்கூடாதா? நான் இந்த மண்ணிலே வாழ்பவளல்லவா?
  எனக்கு மானமில்லை என்று நினைத்துவிட்டாயா?

அன்னம் : வாயும் வயிறுமாகத் தாயாகும் நிலையில் இருக்கிறாயே; சகோதரி,
  நீ இங்கேயே இருக்கலாமே.