காவேரி :
மங்கையர் நடத்தும் மாண்புமிகு போராட்டத்தில் என் குழந்தை
கருவிலிருந்தே
கலந்துகொண்டான் என்ற பெருமை பெறட்டுமே!
கரிகாலன், தாய் வயிற்றிலிருந்தே தாயம் எய்தினான்!
என் குழந்தை தாய்
வயிற்றிலிருந்தே தமிழ் மண்டபத்துக்காகப் போராடினான் என்னும்
புகழைப் பெறட்டும்! என்னைத் தடுக்காதே, சகோதரி!
[காவேரி மேலே நடக்கிறாள். அன்னத்தின் கண்களில் கண்ணீர்
நிறைகிறது.]
அன்னம் :
(கைகூப்பி) தமிழ்த் தாயே! உன் தனயனுக்கு வழங்கப்பட்ட
புகழ்க் கோயிலை நாங்கள்
காப்பாற்றி விடுவோம்! கருவுற்ற காரிகையின்
வீரமும் தீரமும் கண்டு காலனே கலங்குவான்!
இந்தப் பாண்டிய வீரர்கள்
எம்மாத்திரம்! வெற்றி எமதே! வெற்றி எமதே!
[அன்னம் முழங்கியவாறு, மங்கையரின் கூட்டத்தோடு கலந்து செல்கிறாள்.]
-திரை-
காட்சி - 17
இடம் :
உறையூர் அரண்மனையில் பதினாறு கால் மண்டபம்.
நேரம் :
காலை
தோன்றுவோர் :
பொன்னி முதலிய உறையூர் மகளிர், அன்னம், பாண்டியப்
படைவீரர்கள்,
படைத்தலைவன்.
[பதினாறு கால் மண்டபத்தை நோக்கிப் பாண்டியப் படைவீரர்கள்
பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.] |