அம்பலம் :
எவனோ, உருட்டிவிட்டான்? நான் எல்லாவற்றையும் பொறுக்கி,
வகைப்படுத்தி வைக்க வேண்டும்.
[அம்பலம் நவமணிகளை வகைப்படுத்தி முன் போல் பிரித்து வைக்கிறான்.
அன்னம் உட்கார்ந்து பாடுகிறாள்]
அன்னம் :
மலையகழ்க்குவனே! கடல் தூர்க்குவனே வான் வீழ்க்குவனே!
வளிமாற்றுவன்!
[பரவசத்தோடு பாடுகிறாள், அன்னம். அவள் முகம் பதுமமாய் மலர்கிறது]
-திரை-
காட்சி - 2
இடம் :
முடிகொண்ட சோழபுரத்து அரண்மனை.
நேரம் :
முற்பகல்.
தோன்றுவோர் :
இராசராசர், புவனமுழுதுடையாள், பிருமாதிராசர்.
[அரசர் இராசராசர் சோர்வுடன் உட்கார்ந்திருக்கிறார். அரசி
புவனமுழுதுடையாள் அறைக்குள் நுழைகிறாள். அவள் அதைக்
கவனிக்கவில்லை. அரசி அரசனருகே வேறோர் ஆசனத்தில் அமர்கிறாள்.]
புவனமுழுதுடையாள் :
மன்னவா!
[அரசியின் குரல் அரசரின் செவியில் விழவில்லை. அரசி மீண்டும்
அழைக்கிறாள்.] |