படைவீரன்-2 :
பொண்ணுங்களா, நீங்க எப்படி இவ்வளவு உயரமான
மண்டபத்திலே ஏறினீங்க?
என்னமோ தேர்த்திருவிழா பார்க்க
தெருவோரத்து மாளிகையின் கூரையிலே ஏறுவதைப்போல ஏறி
நிற்கிறீங்களே! நீங்கள்ளாம் எப்போது ஏறினீங்க?
[படைவீரன்-1ம். படைத்தலைவனும் வருகிறார்கள்.]
படைத்தலைவன் :
இரவு முழுவதையும் நீங்கள் வேடிக்கை விளையாட்டிலே
கழித்தால், இவர்கள்
எப்போது ஏறினார்கள், எப்படி ஏறினார்கள்
என்பதெல்லாம் எப்படித் தெரியும்?
படைவரன்-2 ;
தலைவரே, இப்படிப் பொம்பளைங்க கூட்டமா, இந்த
மண்டபத்திலே ஏறி நிற்பாங்கன்னு
நான் நினைக்கலே! ஏன், நீங்களும்
நினைச்சிருக்க மாட்டீங்க.
படைவீரன்-3 :
(பாடுகிறான்) மண்டபத்து மேலே மங்கையர் கூட்டம்,
மலையிலே நிறைந்த மயில்களின்
ஆட்டம்!
படைத்தலைவன் :
யாரடா அவன், கவிதை புனைவது?
[தலைவர் சத்தமிட்டதும் பாடல் நிற்கிறது. அமைதி நிலவுகிறது.
தலைவன் அண்ணாந்து மண்டபத்தின் சிகரத்தைப் பார்க்கிறான்.]
படைத்தலைவன் :
எவ்வளவு உயரமா? இதன் மேலே பெண்கள் எப்படி
ஏறினார்கள்? (உரக்க) பெண்களே,
நீங்கள் எப்படி மண்டபத்து மேலே
போனீர்கள்? மேற்றளம் போகப் படிகள் ஏதும் இல்லையே! |