இராசராசர் :
அமைச்சரே, முடிசூட்டு விழா முடிந்துவிட்டது. பல
வூர்களிலிருந்து வந்த நம் அரசியல் அதிகாரிகளையும், பிற
அரசுகளின்பிரதிநிதிகளையும் நேரில் பார்த்துப் பேசினீர்களே, உங்கள்
கருத்து என்ன?
[அமைச்சர் தயங்குகிறார். அரசியைப் பார்த்துப் பின் அரசரைப் பார்க்கிறார்.
புவன :
அரசியல் இரகசியங்கள் பேசும்போது நான் இங்கே இருக்கக்
கூடாது.
[அரசி எழுகிறாள்]
இராசராசர் :
தேவி அமர்க! அமைச்சரே, ஏன் தயக்கம்?
பிருமா ;
அரசியாருக்குத் தெரியாத அரசியல் இரகசியம் ஏதுமில்லை.
அரசியின் தந்தையாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமே என்றுதான்
தயங்கினேன்.
புவன :
அமைச்சரே, என் தந்தையாரின் குறையைப் பற்றிக் குறிப்பிட்டால்
நான் வருந்துவேன் என்று நினைக்காதீர்கள். நான் வாணர் குலத்து இளவரசி
என்பது பழைய கதை! வளவர் நாட்டுப் பேரரசி என்பதே இன்றைய நிலை!
அதனால் உறவு, உண்மையை மறைக்கக் கூடாது. நீங்கள் அறிந்ததைக்
கூறுங்கள்.
பிருமா :
அரசே, நம் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களில் பெரும்பாலோர்
வந்திருந்தார்கள். வாண கோவரையர், தங்கள் சிற்றரசர் என்ற முறையிலும்,
மாமனார் என்ற முறையிலும், விழாவுக்கு வந்திருக்க வேண்டும். அவர்
வரவில்லை என்பது பெருங் குறையாகப்பட்டது. பலரும் அது குறித்துப்
பேசினார்கள்
இராசராசர் :
அறிவேன் அமைச்சரே, மேலே சொல்லுங்கள். |