விழாவுக்கு வரமாட்டான் என்று நாம் கருதினோம். நம் அழைப்பைப்
புறக்கணிப்பான் என்றும் எண்ணினோம், ஆனால் பாண்டியன் அப்படிச்
செய்யவில்லை.
புவன :
முடிசூட்டு விழாவிற்குப் பாண்டியன் வந்திருந்தானா?
பிருமா :
முத்தமிழரசி, பாண்டியன் வரவில்லை. ஆனால் உடல்
நலமின்மையால் வர இயலவில்லை என்று மடல் அனுப்பி நம் மன்னரை
வாழ்த்தியிருக்கிறான். தனக்குப் பதில் தன் படைத்தலைவர்கள் கண்டன்
உதயஞ் செய்தான் காங்கேயனையும், திருக்கானப் பேருடையான் மழவர்
மாணிக்கத்தையும் அனுப்பியிருந்தான். காங்கேயன் நாற்படைத் தலைவன்.
போர்ப் படை நடத்துவதில் இன்று தமிழகத்தில் பேர் மிகப் பெற்றவன்
இவனே மழவர் மாணிக்கம் தேர்ப்படைத் தலைவன். தேர் செலுத்தும்
திறமையில் இவன் ஒரு நளன். கானப் பேரெழில் சிற்றரசனான இவனை
மழவர் குலத்தினர், ‘மழவர் சக்கரவர்த்தி’ என்றழைக்கின்றனர். இருவரும்
இரு பேழைகளை ஏந்தி வந்தனர். ஒரு பேழை நிறையக் கொற்கை முத்துகள்!
மறு பேழையில் ஒரு பொற்கவசம்! இரண்டையும் தன் பரிசாக
அனுப்பியிருந்தான்.
இராசராசர் :
பரிசு அனுப்பிய பாண்டியன், நமக்களிக்க வேண்டிய திறை
செலுத்திவிட்டானா?
பிருமா :
இரண்டாண்டுகளாகத் திறை செலுத்தவில்லை.
புவன :
திறை செலுத்தாதவன் பரிசு வழங்கியிருக்கிறான். ஒருவேளை
பாண்டியன் தான் பணிவோடு திறை செலுத்தும் அடிமையல்ல.
முடிவேந்தர்க்குப் பரிசளித்து வாழ்த்தும் சமவுரிமை பெற்றவன் என்பதைச்
சூசகமாகச் சொல்கிறானோ? |