பக்கம் எண் :

18வளவன் பரிசு

இராசராசர் : இருக்கும் தேவி. அவன் அரியணையின் படியேறிய
  நொடியிலிருந்து படைப் பெருக்கத்திலேயே முழுக்கவனம் செலுத்தவதாக நம்
  ஒற்றர் தெரிவித்தனரே!

பிருமா : அரசியார் உரைத்ததையே அடியேனும் நினைத்தேன். விழாவுக்கு
  வந்த பிறர் மறுநாளே திரும்பினர். பாண்டிய படைத் தலைவர் மட்டும்
  ஐந்துநாள் தங்கிவிட்டு இன்றுதான் விடைபெற்றுச் சென்றனர். பாண்டியனிடம்
  நாம் முன்னெச்சரிக்கையோடிருப்பதே நன்மை பயக்கும்.

புவன : அத்தோடு போசள மன்னரோடு நமக்கிருக்கும் நட்பைப் பெருக்கிக்
  கொள்ளவேண்டும்.

பிருமா : முடிசூட்டு விழாவிலே நம்மை மகிழ்ச்சி செய்தவர்கள் போசளரே!
  போசள மன்னர் வல்லாள தேவரும் இளவரசர் வீர நரசிம்மரும் மூன்று நாள்
  முன்னதாக வந்து, விழா முடிந்த மூன்றாம் நாள் சென்றனர் இன்று நம்
  பேரரசர் பெற்றிருக்கும் பெருஞ்செல்வமே இப் போசளரின் நட்பு என்று
  சொல்லலாம்.

இராசராசர் : அமைச்சரே, வாண கோவரையரையும், கோப்பெருஞ்
  சிங்கனையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யுங்கள். பாண்டி நாட்டில் உள்ள
  நம் ஒற்றரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குங்கள். மதுரைச் செய்திகள்
  தாமதமின்றிக் கிடைக்க வழி செய்யுங்கள்.

பிருமா : அப்படியே அரசே.

இராசராசர் : நல்லது நீங்கள் செல்லலாம்.
  [பிருமாதிராசர் வணங்கிச் செல்கிறார். இராசராசர் புவன முழுதுடையாளைச்
  சற்றுநேரம் உற்றுப் பார்க்கிறார்.]