இராசராசர் :
எது அரசி?
புவன :
புனலும் கனலும் ஒருகலத் திருப்பது.
இராசராசர் :
புரியவில்லையே!
புவன :
அமைதியைப்பற்றிப் பேசியபோது உங்கள் அகமும் முகமும்
புனலாய்க் குளிர்ந்தன! அமரைப் பற்றிப்
பேசியபோதோ அவை கனலாய்த்
தகித்தன! உங்கள் உடற்கலத்தில் இப்புனலும் கனலும் ஒன்றாய்
இருப்பது
அதிசயந்தானே!
இராசராசர் :
(சிரித்து) தேவி! அரச வாழ்க்கை இத்தகைய முரணுடையதே!
புவன :
முரணும் ஓர் அழகு என்றே இலக்கணம் இயம்பும்!
இராசராசர் :
தேவி, போரைப்பற்றிப் பேசிக் குருதியைக் கொதிப்புறச்
செய்துகொண்டேன். அதைச்சற்றே
தணிக்க யாழ்மீட்டி இசை மழை
பொழிகிறாயா?
புவன :
அப்படியே சுவாமி.
[புவன முழுதுடையாள் யாழ் இசைக்க அந்த இசையில் ஈடுபட்டு இன்பந்
துய்க்கிறார் இராசராசர்.]
-திரை- |