பக்கம் எண் :

22வளவன் பரிசு

காட்சி - 3
 

இடம் : உறையூரில் ஒரு சோலை.

காலம் : மாலை.

தோன்றுவோர் : அன்னம், தாமரைக்கண்ணன், அம்பலம்.

 [தாமரைக்கண்ணன் சோலையின் ஒரு புறத்தே அமர்ந்து, எதிரேயுள்ள
 செடிகளில் பூத்த மலர்களையும் அவற்றில் பொருந்தும் வண்டுகளையும்
 கண்டு களித்துக் கொண்டிருக்கிறான். அம்பலத்துடன் அங்கே வந்து சிறிது
 தூரத்தில் நிற்கிறாள், அன்னம்.]

அம்பலம் : அதோ பாரம்மா, பாட்டுச் சொத்தைச் சேர்த்து வைத்திருக்கும்
 பணக்காரர்; தாமரைக் கண்ணன். இவரைக் காலையில் உறையூர்
 அரண்மனைக்குள்ளே பார்க்கலாம். மாலையில் இந்தச் சோலையில்
 பார்க்கலாம். பகல் நேரத்தில் அவரது வீட்டில் பார்க்கலாம். அவர் வீடும் நம்
 வீடு போலப் பெரிய மாளிகை. நீங்கள் சொன்னதால், சுற்றியலைந்து இந்தச்
 செய்திகளைச் சேகரித்தேன். ஏனம்மா, இந்த கோபக்காரனைப் பற்றிய
 விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? இப்போது இவரைத்
 தேடி இங்கே வந்திருக்கிறீர்களே எதற்கம்மா?

அன்னம் : அம்பலம், அதையெல்லாம் அப்புறம் உனக்குச் சொல்கிறேன்.
 இப்போது நீ போகலாம்.

அம்பலம் : நான் போகலாமா! நீங்கள்?