பக்கம் எண் :

26வளவன் பரிசு

  பாடிய சிறுமையை அன்று தூற்றினீர்கள். அதனால் முதலில் கோபம்
  கொண்டாலும் பிறகு நாணம் கொண்டேன். இந்த உறையூரின்
  அரண்மனையிலே அரங்கேறிய பாடலைக் குரங்கேந்திய மாலையாக்கிய
  பேதைமைக்கு வருந்தினேன். அதனால் தூற்றியவர் போற்றுகின்ற
  ஆற்றலைப் பெற முயன்றேன். தாமரைக்கண்ணரே, பட்டினப்பாலையை
  முற்றிலும் கற்ற பிறகுதான் உங்களுக்கு என் பிழைப் பாடலால்

  பெருங்கோபம் பிறந்தது நியாயம் என்பதை உணர்ந்தேன்.

தா. கண்ணன் : அப்படியா?

அன்னம் : ஆமாம் கண்ணா ... இல்லை ... கண்ணரே!

தா. கண்ணன் : கண்ணா என்றே அழைக்கலாம் கண்ணே! அந்த
  விளியேிலேதான் காதல் உரிமை ஒலி இனிக்கிறது!

அன்னம் : (அன்பு ததும்ப....) கண்ணா...

தா. கண்ணன் : என் கோபம் நியாயம் என்று விளக்க வந்தாயோ!

அன்னம் : கை வல்ல கலைஞன் கொல்லிப் பாவை போல ஒரு சிற்பம்
  செதுக்குகிறான். உயிர்ச் சிற்பமாக விளங்கும் அதன் உயர்வைப் பார்த்துப்
  பார்த்துப் பரவசமடைகிறான் கலை மேதை. அப்போது கல்லாத பேதை
  ஒருவன் கற்சிலையின் பேசும் விழியைச் சிதைக்கிறான். நாசியின் முனையில்
  குன்றி மணியளவு குறைத்து விடுகிறான் - என்று வைத்துக் கொள்வோம்.
  அதனால் சிற்பத்தின் முழுமை மூளியாகும்; அழகு அலங்கோலமாகும்.
  சிதைத்த மூடன், கல்சிறிது பெயர்ந்து விட்டதாகக் கருதலாம். சிற்பியோ
  உயிரையே சிதைத்ததாய்த் துயருறுவான். சிதைத்த மூடனை வதைக்குமளவு
  சினம் கொள்ளுவான்!