பக்கம் எண் :

காட்சி - 331

அன்னம் : ஐயையோ!

தா. கண்ணன் : என்ன? ஏன் இந்த பதற்றம்!

அன்னம் : இருட்டு முன் வீட்டுக்குத் திரும்ப நினைத்தேன்.
  இருட்டிவிட்டதே.

தா. கண்ணன் : இருளே, நீ பாழாய்ப் போக! இவளை என்னிடமிருந்து
  பிரிக்கிறாயே.

அன்னம் : கண்ணா. நான் சென்று வருகிறேன்.

தா. கண்ணன் : மறுபடியும் எப்போது சந்திப்பது? நவ மணிக்கடையில்
  இப்போதெல்லாம் உன்னைக் காண முடியவில்லை!

      (அன்னம் களுக்கெனச் சிரிக்கிறாள்.)

தா. கண்ணன் : எதற்காகச் சிரிக்கிறாய்?

அன்னம் : என்னைப் பார்ப்பதற்காகக் கடைவீதியில், வாயில் காக்கும்
  காவலன் போலத் தெருவின் இரு முனைக்கும் இடையே நடை
  போட்டீர்களாமே! ஒரு நாள் கடைக்குள் நுழைந்து முத்துமாலை வாங்க
  வந்தவர்போல் நடித்து, அம்பலத்திடம் என்னைப் பற்றி இரகசியமாய்க்
  கேட்டீர்களாமே! அப்புறம் வெறுங்கையோடு திரும்ப வெட்கி ஒரு முத்து
  மாலையை வாங்கிக்கொண்டு, இஞ்சி தின்ற குரங்காய்ப் படியிறங்கிச்
  சென்றீர்களாமே! அதை நினைத்ததும் சிரித்தேன்.

தா. கண்ணன் : ஆமாம்! ஆமாம்! நீ நவமணிக் கடைக்கு இப்போதெல்லாம்
  செல்வதில்லையா?

அன்னம் : நண்பகல் நேரத்தில் என் தந்தையார் உண்பதற்கு வருவதானால்
என்னைக் கடைக்கு வரச் சொல்வார். இப்பொதெல்லாம் ஆளை அனுப்பி
உணவைக் கடைக்கே வரவழைத்துக்கொள்கிறார்.