பக்கம் எண் :

38வளவன் பரிசு

தனபதி : இது நவமணி வணிகர் தனபதி வீடுதானே?

அன்னம் : என்னப்பா இது? உங்கள் வீடு உங்களுக்குத் தெரியவில்லையா?

தனபதி : இது வணிகர் வீடா, புலவர் வீடா என்பது புரியாமல்
  குழம்புகிறேன். எதிர் வீட்டில்தான் எப்போதும் தமிழ்ப்பாடல் முழங்கும்.
  வணிகர் வீட்டில் பொற் காசுகள் குலுங்கும் ஒலியும், அணிகலன்கள்
  அசையும் ஒலியும் கேட்க வேண்டும். இப்போதெல்லாம் நமது வீட்டில்
  குருகுலம் போலத் தமிழோசை பெருகுகிறது.

    [தனபதி பேசியபடி நடந்து சென்று ஊசலில் அன்னத்தின் அருகே
    அமர்கிறார்]

அன்னம் : தமிழர் வீட்டில் தமிழோசை பெருகினால் தவறென்ன
  தந்தையே? வணிகராயினும் நாம் தமிழர் தானே! நான் பாடிய பாடல்
  வணிகரைப் பற்றியதுதான்.

தனபதி : கொடுப்பது, கொள்வது என்று பாடினாயல்லவா? அந்தப் பாடலை
  எப்போதோ எங்கோ கேட்டதாய் நினைவு.

அன்னம் : உறையூர் வணிகரில் பெரும் புகழ் பெற்ற நீங்கள் இப்படிச்
  சொல்லலாமா? வணிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது
  இப்பாடல்! வணிகர்கள் வடுவஞ்சி வாய் மொழியவேண்டும். வணிகர்கள்
  பொய் கூறினால் அவர்கள் குடிக்கு வடுசேருமாம். அந்த வடுவுக்கு அஞ்சி
  வாய்மை வழங்க வேண்டும். தமவும் பிறவும் ஒப்ப நாட வேண்டும்.
  தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பண்டங்களையும் ஒரு
  தன்மையாகக் கருதவேண்டும்.


தனபதி : அப்புறம்?