பக்கம் எண் :

காட்சி - 539

அன்னம் : கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது
  பல்பண்டம் பகர்ந்து வீச வேண்டும். தாம் வாங்கும் பண்டங்களை,
  கொடுக்கும் விலைக்கு அதிகமாக வாங்காமல், கொடுக்கும் பண்டங்களைப்
  பெறும் விலைக்குக் குறைவாகக் கொடாமல், வாணிபத்தால் தமக்கு
  கிடைக்கும் ஆதாயத்தை வெளிப்பட மொழிந்து வியாபாரம் 
  செய்யவேண்டும்.


தனபதி : கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
அன்னம் : வணிகப்பெருமகனாரே, இது செவி மடுப்பதற்கான அறமன்று;
  செயல்படுத்துவதற்கான அறம். மூன்று பொன்னுக்கு முத்தை வாங்கிப்
  பதின்மூன்று பொன்னுக்கு விற்றுப் பழகிய நீங்கள் இனிமேலாவது
  பட்டினப்பாலை பயிலுங்கள். அது உரைக்கும் பான்மையில்
  செயல்படுங்கள்.

தனபதி : பட்டினப்பாலை பழங்காலத்து நூலல்லவா?

அன்னம் : ஆம்! கரிகாலன் காலத்து நூல்.

தனபதி : ஆயிரமாண்டுக்கு முந்திய முறை இப்போது பயன்தராது அன்னம்!
  மன்னன் மாறுகிறான்! மக்கள் மாறுகிறார்கள்! ஏன் மரம் செடிகளும்
  மாறுகின்றன! பழங்காலத்தில் ஒரு பிடி படியும் சீரிடத்தில் எழுகளிறுக்கு
  உணவு கிடைக்குமாம்! இன்று வயலிலே அந்த வளம் இல்லை! மக்கள்
  செயலிலே முழு நலம் இல்லை.

அன்னம் : வணிகர்கள் பேசக் கற்றவர்கள். ஒரு பொன் மதிப்புள்ளதை
  ஒன்பது பொன் மதிப்புள்ளதாகக் கூறி வாங்குவோரை நம்ப வைப்பார்கள்.
  நீங்கள் கரிகாலன் காலத்துக்கு அறம் வேண்டும். இராசராசன் காலத்துக்கு

  அது வேண்டாம் என்கிறீர்கள்.