தனபதி :
அறம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அன்னம், பொருளை
அதிக விலைக்கு
விற்காமை அன்றைய அறம். இன்று அதிக விலைக்கு
விற்பது மறமன்று; அது வணிகரின் திறம்.
யாரங்கே நிற்பது?
[அம்பலம் கையில் ஓர் ஏட்டுச் சுவடியோடு வாசல் வழியே எட்டிப்
பார்க்கிறாள்.]
அம்பலம் :
நான் தானுங்க; அம்பலம்.
தனபதி :
உள்ளே வருவதுதானே! ஏன் வாசலில் தயங்கி நின்றாய்?
அம்பலம் :
ஒன்றுமில்லைங்க.
தனபதி :
கையிலே என்ன?
அம்பலம் :
ஒன்றுமில்லைங்க.
தனபதி :
எது கேட்டாலும் ஒன்றுமில்லைதானா? ஏதோ சுவடி
போலிருக்கிறதே.
அம்பலம் :
ஆமாங்க.
தனபதி :
கொண்டுவா, இங்கே....
[அம்பலம் தனபதியிடம் சுவடியைத் தருகிறாள். தனபதி அதில்
எழுதியிருப்பதைப் படிக்கிறார்.]
தனபதி :
பெரும்பாணாற்றுப்படை, அம்பலம் நீயும், தமிழிலக்கியம் படிக்கத்
தொடங்கிவிட்டாயா?
அம்பலம் :
எனக்கில்லைங்க.
தனபதி :
பின் யாருக்கு?
அன்னம் :
எனக்குத்தான்! நான்தான் இதை எதிர் வீட்டுப் புலவரிடமிருந்து
பெற்றுவரச்
சொன்னேன். |