அறிவும் திருவும் ஒருசேரப் பெற்றவர். செல்வத்தைக் கண்டு மயங்கும்
சிறுமை இந்தக் கண்ணனிடம்
இல்லை.
தனபதி :
செல்வத்துக்கு மயங்காத புலவர்கள் எனக்குத் தெரிந்தவரை
எவரும் இல்லை. எத்தனையோ
பாவலர்கள் என் கடையின் படியேறி
வந்திருக்கிறார்கள்! ஒரு பொன்னுக்கு என்னைப் புகழின்
உச்சியில் ஏற்றி
வைப்பர். கர்ணன் என்றும், கற்பகம் என்றும் போற்றித் துதிப்பர்!
அன்னம் :
வண்டமிழின் அருமை அறியாது, வறுமையின் சிறுமை மட்டுமே
அறிந்த அரைகுறைப்
புலவர்கள் இப்படி அலைந்து திரிவதாகக்
கேள்வியுற்றிருக்கிறேன். கூடை சுமந்து கொட்டிக்
கிழங்கு விற்பதும்
வாணிபந்தான்! மரகதமும் மாணிக்கமும் கொட்டிக் குவித்து விற்பதும்
வாணிபந்தான்!
எனினும் இரண்டும் இரு துருவங்கள்! தாமரைக்கண்ணன்
பொன்னுக்குப் பாடமாட்டார்: தன்
புகழுக்குப் பாடுவார்! அதுவும்
புகழாளனையே பாடுவார்! அவர் இப்போது பெற்றுள்ள செல்வம்
முற்றிலும் நீங்கி வறுமையுற்ற போதும், புலவர் பாடும்
புகழுடையாரையன்றி வெறும்பொருளுடையாரைத் தன் பாடற் பொருளாக்க
மாட்டார்.
தனபதி :
அறியாச் சிறுமி நீ! உனக்குச் செல்வத்தின் சிறப்பை
அறிவிக்கிறேன். இந்த தாமரைக்கண்ணன்
என்னைப் பாடும்படி
செய்கிறேன்!
அன்னம் :
உங்களையா? ஒன்றின் விலையை ஒன்பது மடங்கு உயர்த்தி
விற்கும் திறன் ஒன்று
மட்டுமே அறிந்த உங்களையா? தமிழ்ச் சுவை
அறியாத, தரும் சுகம் தெரியாத உங்களையா, தாமரைக்கண்ணன்
பாடுவார்? |