பக்கம் எண் :

50வளவன் பரிசு

   உனக்கும் என்னால் முடிந்த பொருளுதவி செய்ய வேண்டும் என்று
   விரும்புகிறேன். நீ என்னைப் பற்றி ஒரு பாட்டுப்பாடு.

தா. கண்ணன் : (சிரித்து) வணிகரே, உறையூரில் புலவர்களை ஆதரித்துப்
  பெரும்பொருள் வழங்கிய வள்ளல்கள் பலர் உண்டு. அவர்களுள் வணிகர்
  சிலர் உண்டு. நானறிந்தவரையில் நீங்கள் புலவரை ஆதரித்ததாகத்
  தெரியவில்லை. புலவர்பாடும் புகழ்க்குணங்கள் உம்மிடம்
  பொருந்தியிருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை!

தனபதி : தம்பி, நீ சும்மா பாடவேண்டாம் நீ என்னைப் பற்றிப்பாடும்
  பாட்டுக்கு நூ...று பொன் பரிசு தருகிறேன்.

தா. கண்ணன் : வணிகரே பொன்னைப் பெற்றுப் பாடலை விற்கும்
  தமிழ்விலை வணிகனல்லன், தாமரைக் கண்ணன். நூறு பொன்னுக்குப் பாட
  வேறு புலவரைத் தேடும்.


           [தாமரைக் கண்ணன் எழுந்து கொள்கிறான்]

தனபதி : இரு தம்பி! இரு! பொன் வேண்டாம் என்றால் விடு. பொன்
  பெறாமல்தான் ஒரு பாடல் பாடேன்!

தா. கண்ணன் : உம்மைப் பற்றியா?

தனபதி : ஆமாம். என்னைப்பற்றித்தான். வணிகரைப் பாடக்கூடாது என்பது
  உன் கொள்கையா?

தா. கண்ணன் : ஐயா, வணிகரே, வணிகர்க்குரிய கடமைகளைத் தவறாது
  செய்யும் செம்மல்களை வாயாரப் புகழ்வது புலவரின் வழக்கம்.